"ஒரு இதய நோயாளி என்றும் பாராமல்..".. ஒருத்தரையும் விட்டு வைக்காத ED - ரெய்டில் இத்தனை சம்பவம் நடந்துச்சா?

x

சென்னையிலும், விழுப்புரத்திலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் திங்கட்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது.

விழுப்புரம் சண்முகாபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க வைத்து சோதனை நடத்தினர்.

11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக கௌதம சிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் சோதனை நடைபெற்றது.

விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வந்த திமுக தொண்டர் ஒருவரை அதிகாரிகள் நீண்ட நேரத்திற்குப் பின்னர் விடுவித்தனர். தான் ஒரு இதய நோயாளி என்று கூறியும், தன்னை வெளியே அனுப்பாமல், தனது செல்போனை பறித்துக் கொண்டு, தேநீர் அருந்தக்கூட விடவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்து யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய தடயவியல் அதிகாரிகள் பொன்முடியின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனிடையே, அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இவை தவிர, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ள நகைகளை மதிப்பிடுவதற்காக, அமலாக்கத் துறையின் அழைப்பை ஏற்று வங்கி அதிகாரிகள் பொன்முடி வீட்டுக்கு வந்தனர்.

13 மணி நேர சோதனைக்குப் பிறகு, சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் பொன்முடி மட்டுமே தனியாக விசாரணைக்கு சென்றார்..

அமலாக்கத் துறை அலுவலகத்தில், அமைச்சர் பொன்முடியிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்களும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்து, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்