டான்சர் ரமேஷ் மரணம்... கொலையா..? தற்கொலையா..? - மாறி மாறி சொல்லும் மனைவிகள்... பின்னணி என்ன..?

டான்சர் ரமேஷ் மரணம்... கொலையா..? தற்கொலையா..? - மாறி மாறி சொல்லும் மனைவிகள்... பின்னணி என்ன..?
Published on

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு பின்புறம்... மூர் மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தவர்தான் ரமேஷ். தன் நடனத் திறமையை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக வெளிப்படுத்தி அவர் டான்ஸர் ரமேஷாக புகழ் பெற்றார்.

அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சி, சினிமா வாய்ப்புகள் என டான்ஸர் ரமேஷின் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது.

சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் கூட சிறு வேடத்தில் ரமேஷ் தோன்றினார்.

மேலும், திரைக்கு வரவிருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

திரை வாழ்வில் ஜொலித்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் டான்சர் ரமேஷுக்கு அமைதி இருந்ததில்லை.

அவருக்கு 2 மனைவிகள். பிரபலம் ஆவதற்கு முன்னர் மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள முதல் மனைவி சித்ரா மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

பிரபலம் ஆன பிறகு, முதல் மற்றும் 2வது மனைவிகளுக்கு இடையே தகராறு ஏற்படவே, பின்னர், கே.பி. பார்க் பகுதியில் உள்ள 2வது மனைவியான இன்பவள்ளி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜனவரி 27ம் தேதி அன்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ரமேஷ். அப்போது நண்பர்களுக்கு விருந்து வைக்க, தனது 2வது மனைவி இன்பவள்ளியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

மனைவி பணம் தர மறுக்கவே, ரமேஷ் விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில், வீட்டின் 10வது மாடியில் இருந்து ரமேஷ் திடீரென கீழே விழுந்துள்ளார்.

அதில் ரத்த வெள்ளத்தில் அவர் பலியாகியுள்ளர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது மனைவி தரப்பில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும், முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com