தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம்... 5 நபரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

x

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பெங்களூர் நகரில் சதி வேலை செய்வதற்காக முகமது ஷாரிக் என்பவர் குக்கர் வெடிகுண்டை ஆட்டோவில் எடுத்துச் சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு ஆட்டோவிலேயே வெடித்து சிதறியதில் ஆட்டோ ஓட்டுநரும் ஷாரிக்கும் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் அதிஷ்ட்டவசமாக தடுக்கப்பட்டது என்றாலும் தற்போது மீண்டும், ஒரு சதிச்செயல் காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் தடுக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூரில் உள்ள சுல்தான் பால்யா என்ற பகுதியில் சிலர் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த 5 இளைஞர்களை அதிரடியாகச் சுற்றி வளைத்திருக்கிறார்கள். அந்த வீட்டை சோதனையிட்டதில் எக்கச்சக்கமான துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 7 கை துப்பாக்கிகள் 45 தோட்டாக்கள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள், 19 கைபேசிகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட 5 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் அவர்கள் பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பில் இருந்ததும், அதைத் தொடர்ந்து பல நாட்களாக நாசவேலைக்கு சதித்திட்டம் போட்டதும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

2017-ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்ட சுனைத், சோஹில், ஓமர், ஜாகிர், முதாசிர் மற்றும் பைசல் என்ற 6 பேரும் பரப்பன அக்கரகார சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த ஜெயில் வாழக்கையில் அவர்களுக்கு நசீர் என்பவரின் நட்பு கிடைத்திருக்கிறது.

நசீரின் பெயரை அவ்வளவு எளிதாகா யாரும் மறந்திருக்க முடியாது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர். தற்போது வரை சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில் தான் சிறையில் 6 இளைஞர்களையும் மூளைச்சலவை செய்த நசீர், அவர்களைப் பயங்கரவாத தக்குதல் நடத்துவதற்கான ஆயுதமாக மாற்றி இருக்கிறார்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த 6 பேரும் நசீர் விதைத்த நச்சு விதையை, விருச்சமாக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

6 பேரில் சுனைத் மட்டும் வெளி நாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கிறார். மற்ற 5 நபர்களும் சதித்திட்டத்திற்குத் தேவையான வேலைகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆயுதங்களைச் சேகரித்த இந்த கும்பல் தங்களுக்குள்ளாகத் தகவல்களை பரிமாறிக் கொள்ள வாக்கி டாக்கி மற்றும் 19 செல்போண்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களுக்குத் தேவையான உதவிகளை வெளிநாட்டில் இருந்து சுனைத் செய்து வந்திருகிறார். சிறையிலிருந்தபடியே பல நாச வேலைகளுக்கு நசீர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் போலீசாருக்கு கிடைத்த ஒரு ரகசியத் தகவல் இவர்களது, சதிச் செயலை அம்பலமாக்கிவிட்டிருக்கிறது.

கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவரும் போலீசார், வெளி நாட்டில் இருக்கும் சுனைத்தை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்