மெரினாவில் தீர்ந்தது மாற்றுத்திறனாளிகளின் ஏக்கம் - "சொன்னதை செய்தோம்".. நெகிழ்ந்த முதல்வர்

x

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.உலக பிரசித்தி பெற்ற மெரினா கடலின் அழகை அருகில் சென்று ரசிக்கும் வகையில், நிரந்தர பாதை அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, சென்னை மாநகராட்சியின் 2.0 திட்டத்தின் கீழ்,1.09 கோடி ரூபாய் செலவில் மாற்றுத்திறனாளிக்கான நிரந்தர பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையை திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான, உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.தயாநிதி மாறன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை திறக்கப்பட்டதால், உள்ளம் பூரித்து மகிழ்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம் என்றும், பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மெரினா வந்த தங்கை வைஷ்ணவியின் கனவு நிறைவேறியிருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர், உள்ளம் பூரித்து தானும் மகிழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்