எம்.பி.-அமைச்சர் ஆதரவாளர்களிடையே மோதல் - ஆட்சியரை தள்ளிவிட்ட கட்சிகாரர்கள்

x

தமிழகம் முழுவதும் விளையாட்டு துறையின் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ, மாணவி மற்றும் இளைஞர்களுக்கிடையே முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன... இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது...

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் முன்னிலையில் பரிசளிப்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் நிகழ்ச்சி 3 மணியளவில் ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனால், நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மாலை 2.50 மணிக்கு வருகை தந்துள்ளார்..அப்போது, நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு கொண்டிருப்பதை கண்ட நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியரிடம் சென்று அழைப்பிதழில் 3 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என கூறி விட்டு, தான் வருவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சியை ஆரம்பித்தது முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்... இது குறித்த பேச்சுவார்த்தையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நவாஸ் கனி, அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பானது...

அப்போது, இருவரையும் சமாதானம் செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை, நவாஸ் கனியின் ஆதரவாளர்களில் ஒருவர் கீழே தள்ளிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது... இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் குறித்து, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் தினேஷ்குமார் போலீசில் புகாரளித்தார்...இதன் அடிப்படையில், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கேணிக்கரை போலீசார், சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் ஆதரவாளரை தேடி வந்த நிலையில், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூரைச் சேர்ந்த விஜயராமு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்