150 அடி ஆழ்துளையில் துடித்த சிறு இதயம்.. கையை ஆட்டி தாயை அழைத்த பரிதாபம் - ரணமாக்கும் உள்ளே பதிவான கேமரா காட்சிகள்

x

பீகாரில் சுமார் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன், 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கடந்த 2019ஆம் ஆண்டு, ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சிறுவன் சுஜித்தின் மரணச்செய்தியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

இச்சம்பவத்திற்கு முன்னரும், அதன் பின்னரும் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி பல உயிர்கள் பறிபோயுள்ளன.

ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து அடர்ந்த இருட்டில் அலறி துடித்து உயிரிழந்த கதைகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது தான் பெரும் துயரமாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், மத்திய பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள், பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் சுபம் குமார், விவசாயி ஒருவரால் தோண்டப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

இதுகுறித்து அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தகவல் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் பதறி அடித்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தகவலின் பேரில் போலீசாருடன், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சிறுவன் தவறி விழுந்த ஆழ்துளை கிணறு சுமார் 150 அடி ஆழம் என கூறப்படுகிறது. ஆனால் சிறுவன் அந்த ஆழ்துளை கிணறில் 60 அடியில் சிக்கியுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

இதனிடையே கிணற்றுக்குள் சிறுவன் சிக்கியிருக்கும் காட்சிகள் வெளியாகி பதபதைக்க செய்தது.

சிறுவன் அழும் சத்தமும் கேட்பதால், உயிர் சேதம் ஏற்படும் முன் மீட்க வேண்டும் என பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மின்னல் வேகத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்றன. சிறுவனை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள மணல் தோண்டி எடுக்கப்பட்டது.

சிறுவன் உயிரை காக்க ஊர்மக்களும், மீட்பு படையினரும் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். 4 வயது நிரம்பிய சிறுவன் என்பதால், கயிறு கட்டி மேலிழுக்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதனிடையே சிறுவன் இருக்கும் பகுதி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு சிறுவனுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளே செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாலை 5.30 மணியளவில் சிறுவன் சுபம் குமார் பத்திரமாக மீட்கப்பட்டான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

நெஞ்சை பதை பதைக்க செய்த இச்சம்பவத்தில், இறுதியாக சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பெற்ற பிள்ளை உயிருக்கு போராடுவதை கண்டு, எப்பாடு பட்டாவது குழந்தையை மீட்க வேண்டும் என கதறிய தாயின் வேண்டுதல் இறுதியில் பலித்தது.


Next Story

மேலும் செய்திகள்