'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' 55 ஆண்டுகால பொது வாழ்க்கை... மிசா கைது - சிறையில் நடந்தது என்ன?

சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட கண்காட்சியை இந்த செய்தி தொகுப்பின் மூலம் நாமும் பார்வையிடலாம்.
x

மாபெரும் தலைவரின் மகனாக பிறந்து... படிப்படியாக உயர்ந்து... இன்று கோட்டையை பிடித்து ஆட்சி அரியணையில் ஏறியிருப்பவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

முதல்வரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கையால் திறக்கப்பட்ட இந்த கண்காட்சியை பார்த்து இன்று சிறு குழந்தைகளும் 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்று பெருமிதம் கொள்கின்றனர்.


இங்கு புகைப்படங்கள் மட்டுமல்ல.. முதல்வர் ஸ்டாலினின் சிலையையும் நம்மால் பார்க்க முடிகிறது. தொண்டராக இருந்த போதும் முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் பயணித்து வாக்கு சேகரித்ததை நினைவூட்டும் சிலையும் இங்கிருக்கிறது. கூடவே மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை விளக்கும் வகையில் மாதிரி சிறை சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மிசாவை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும்... பூட்ஸ் கால்களில் 'நீ தான் கருணாநிதி மகனா?' என்று கேட்டு அவரை போலீசார் எட்டி உதைக்கும் காட்சிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.


'எம்மதமும் சம்மதமல்ல எம்மதமும் நம்மதமே', 'ஏழை, எளியோருக்கு எப்போதும் இவர் தான் அரண்', 'மூடர் கூடத்திற்கு எப்போதும் இவர் தான் முரண்' போன்ற கருத்துகள் எழுதப்பட்ட புகைப்படங்களையும் நம்மால் காண முடிகிறது.

தனது 55 ஆண்டுகால பொது வாழ்க்கையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற பல்வேறு கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் நம்மால் இங்கு பார்க்க முடியும்.


முதல்வராக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின்... நலத்திட்ட உதவிகள் வழங்குவது... வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவது என அவரின் அனைத்து பக்கங்களையும் காட்சிகளாக்கியிருக்கிறது கண்காட்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை மகனுக்கு இடையேயான பாச பிணைப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

காவிரி மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்வையிட வந்த பிரபலங்களின் புகைப்படங்களும் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி தன்னை தானே சிற்பியாக செதுக்கி கொண்டு இன்று தமிழகத்தின் முதல்வராக, தனது மக்கள் பணியால் பல இதயங்களை வென்று வருகிறார், முதல்வர் ஸ்டாலின்.


Next Story

மேலும் செய்திகள்