ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை,,,சம்பவ இடத்திலேயே பலியான காதலி - 5 நாளுக்கு பின் பிரிந்த காதலன் உயிர்

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை,,,சம்பவ இடத்திலேயே பலியான காதலி - 5 நாளுக்கு பின் பிரிந்த காதலன் உயிர்
Published on

ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு கல்லூரி மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.....

கடந்த 26 ஆம் தேதி, சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே நடந்தது இந்த துயர சம்பவம்... யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது. இதில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நிலையில் இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்து விரைந்த வந்த ரயில்வே போலீசார், தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியதில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண், உள்ளகரத்தை சேர்ந்த பதினான்கே வயதான 10ம் வகுப்பு மாணவி என தெரியவந்தது. மேலும், மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் இளங்கோவன் எனவும் உறுதி செய்யப்பட்டது.

உள்ளரகத்தில் உள்ள நண்பர்களை இளங்கோவன் பார்க்க வந்தபோது, பள்ளி மாணவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம், இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மனவேதனையில் இளம் காதல் ஜோடி இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி, இளங்கோவனுக்கு பிறந்தநாள் என்பதால், இளங்கோவனும், பள்ளி மாணவியும் ரயில் நிலையம் அருகே வந்துள்ளனர். பெற்றோர் காதலை ஏற்காத விரக்தியில், இருவரும் ரயில் முன் பாய்ந்ததாக, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன், 5 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com