சென்னை சாலையில் சிகரெட் பிடித்து 25 ஆயிரம் ஃபைன் கட்டிய இளைஞர் - உஷாரய்யா உஷார்..!

x

சாலையோரம் சிகரெட் பிடித்த இளைஞரிடம், பொது இடத்தில் புகைப்பிடித்தற்காக அபராதம் எனக்கூறி 25 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த கேசவன் என்பவர், அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, எத்திராஜ் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காக்கி உடை அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு, பொது இடத்தில் புகைப் பிடித்ததற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன கேசவன், அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டு, அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை எடுத்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கேசவன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த டான் ஸ்டுவர்ட் என்பவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் அவரிடம் இருந்து 24 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அவர்கள் கேசவனிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்