வாக்காளர் பட்டியலில் வரும் அதிரடி மாற்றங்கள் - மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

பிறப்பு, இறப்பு பதிவுகளை, வாக்காளர்கள் பட்டியலுடன் இணைக்க சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது....

பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய தரவுகளை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, ஒரு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு நபருக்கு 18 வயது ஆனவுடன், அவரின் பெயர், வாக்காளர் பட்டியலில் தானியங்கி முறையில் சேர்க்கப்பட இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

அதே போல், ஒரு நபர் மரணமடைந்த பின், அதைப் பற்றிய தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தானியங்கி முறையில் அனுப்பப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டுவிடும்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய சென்செஸ் ஆணையர் மற்றும் ரெஜிஸ்ட்ரர் ஜெனரல் அலுவலத்தை, திறந்து வைத்த அமித்ஷா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பற்றிய தரவுகள் சரியான முறையில் சேமிக்கப்பட்டால், அதன் மூலம் வளர்ச்சி திட்டங்களை துல்லியமாக திட்டமிட முடியும் என்றும்,

வளர்ச்சிக்கு தேவையான தரவுகள், இதற்கு முன்பு வரை துல்லியமாக சேகரிக்கப்படாததால், துண்டு துண்டான முறையில் வளர்ச்சி நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சென்செஸ் கணக்கெடுப்பு எலக்ட்ரானிக் முறையில் செயல்படுத்தப்படும் என்றும், சுயமாக விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2011 சென்செஸ் கணக்கெடுப்பிற்கு, பிறகு இதுவரை சென்செஸ் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com