காலை சிற்றுண்டி திட்டம் - அதிரடி மாற்றத்துடன் வெளியான அறிவிப்பு
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் காய்கறிகள், சிறுதானிய வகைகள் மூலம் மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க மாற்றியமைக்கப்பட்ட உணவுப்பட்டியலை சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது.சமூக நலத்துறை முதன்மை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஐ.ஏ.எஸ் அனுப்பியுள்ள கடிதத்தில், பழைய பட்டியலில் கூடுதலாக அனைத்து நாட்களிலும் காய்கறி சம்பார் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்குரிய மூலப் பொருட்களில், அரிசி ரவை, கோதுமை ரவை, சேமியா 50 கிராம் அளவில் இருக்க வேண்டும் எனவும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள், சமைத்த பின் 150 முதல் 200 கிராம் உணவு மற்றும் 100மில்லி கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
