பாஜகவின் தலைவலி நம்பர் '49' - சுழன்றடிக்கும் 'சுரங்க' சூறாவளி

x
  • ஜனார்த்தன ரெட்டி, கர்நாடக பாஜகவில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர்.
  • சுரங்க தொழிலில் கோலோச்சியவர், 2008-ல் பாஜகவை அரியணைக்கு ஏற்றியவர்களில் முக்கியமானவர். 2011-ல் கனிமவள முறைகேட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட, இதே விவகாரத்தில் அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
  • இதனையடுத்து கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதாக ஆதங்கம் தெரிவித்து வந்த ஜனார்த்தன ரெட்டி, பாஜக உடனான 20 ஆண்டுகால உறவை முறித்து, கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியை தொடங்கி தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.
  • கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டியும், பெல்லாரி நகர் தொகுதியில் அவரது மனைவி லட்சுமி அருணாவும் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். 49 இடங்களில் களமிறங்கியிருக்கிறது ஜனார்த்தன ரெட்டி கட்சி...
  • பணபலம், சமூக வாரியான ஆதரவு என, கர்நாடக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் ஜனார்த்தன ரெட்டி. அவரது குறி ஐதராபாத்-கர்நாடகா பிராந்தியத்திற்கு இருக்கிறது. கலபுர்கி, யாதகிரி, பிதார், ராய்ச்சூர், கொப்பள், விஜயநகரா, பெல்லாரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக் கியது. கணிசமாக லிங்காயத்துக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. அங்கு அவரது செயல்பாடு பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறுமா என்ற கேள்வி எழுகிறது.
  • கடந்த 2018 தேர்தலிலும் ஐதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் அதிகமாக 15 இடங்களில் வென்றிருந்தது. பாஜக 12 இடங்களில் வென்றிருந்தது. ஆனால் 2013-ல் ஐதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றிருந்தது. பாஜக வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதற்கு பின்னணியில் இருந்தவர்கள் எடியூரப்பா மற்றும் ஸ்ரீராமுலு.
  • 2013 தேர்தலில் எடியூரப்பா தனிக்கட்சியை தொடங்கி போட்டியிட்டதால் பாஜக ஆட்சியை இழக்க நேரிட்டது. எடியூரப்பா போன்று பாஜகவிலிருந்து விலகி ஸ்ரீராமுலு தொடங்கிய பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வென்றதுடன் சில இடங்களில் பாஜக வெற்றியை பதம் பார்த்தது.
  • இப்போது அதே நிலையை பாஜகவுக்கு, ஜனார்த்தன ரெட்டி உருவாக்குவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மறுபுறம் பெல்லாரி பிராந்தியத்தில் தனது செல்வாக்கை காட்ட மல்லுக்கட்டுகிறார் அமைச்சர் ஸ்ரீராமுலு.
  • இதற்கிடையே ஜனார்த்தன ரெட்டியை பாஜகவின் பி டீம் என விமர்சனம் செய்கிறது காங்கிரஸ்... ஆனால் ஜனார்த்தன ரெட்டியின் உறவினர்கள் பாஜகவில் தொடரும் சூழலில், அவரது அரசியல் பலம் குறுகியதே, எனவே அவரால் பாஜகவுக்கு எந்த தாக்கமும் இருக்காது என்ற கூற்றும் பாஜகவினர் மத்தியில் நிலவுகிறது.
  • மறுபுறம் ஜனார்த்தன ரெட்டி பாஜக வாக்கையே பிரிக்கலாம், இது காங்கிரசுக்கு சாதகமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லிங்காயத்து தலைவர்கள் லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகியது வட கர்நாடகாவில் அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் சூழலில், ஜனார்த்தன ரெட்டி பெல்லாரியை யொட்டி தாக்கத்தை ஏற்படுத்துவாரா...? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Next Story

மேலும் செய்திகள்