ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாஜக - ஒரே கல்லில் 4 மாங்கா.. இந்த ட்விஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கலயே

x

பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரா, ஜார்கண்டில் ஆகிய 4மாநில பாஜக தலைவர்களை அதிரடியாக மாற்றியுள்ளது. பாஜக தேசிய தலைமை...இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தீவிர படுத்த தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கான யுக்திகளையும், வியூகங்களையும் வகுத்து வருகின்றன.

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக தேர்தலை எதிர்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் வியூகங்களை உடைக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாஜக.

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக மாநில தலைவர்களை மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள் ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

அதன் படி பஞ்சாப் மாநில தலைவராக இருந்த அஸ்வனி குமார் ஷர்மா நீக்கப்பட்டு சுனில் ஜக்கர் நியமிக்கப் பட்டுள்ளார். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த சுனில் ஜக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்.

ஜார்க்கண்ட் மாநில புதிய பாஜக தலைவராக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான பாபுலால் மராண்டி நியமனம் செய்யப் பட்டுள்ளார். சாந்தல் பழங்குடியினத்தை சேர்ந்த பாபுலால் மராண்டி, பிரபலமானவர் என்பதால், பாஜகவிற்கு பக்கபலமாக இருப்பார் என கருதப்படுகிறது.

ஆந்திராவிலும் சந்திரசேகரராவுடன் கூட்டணி அமைக்க ஏதுவாக, பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா விவகாரத்தில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு புதிய தலைவராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி நியமிக்கப் பட்டுள்ளார். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை பின்பற்றப்படுவதால் கிஷண் ரெட்டி விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதற்கு முன் தலைவராக இருந்த, பண்டி சஞ்சய், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பாஜக தலைவராக பதவி வகித்த போது, கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் கட்சியில் முக்கிய புள்ளியாக கருதப்படுவதால், அவரை மத்திய அமைச்சரவையில் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

அத்தோடு தெலங்கானாவில் ஒபிசி தலைவராக இருந்த எட்லா ராஜேந்தர், மாநில தேர்தல் நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சாதி ரீதியில் வாக்கு வங்கி பாஜகவிடம் தக்கவைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் இந்த அதிரடி வியூகங்கள் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்