கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. தலைகீழாக மாறிய ராகுல் காந்தி இமேஜ்

x

தோல்வியால் துவளாதே... தொடர்ந்து நெஞ்சுரம் கொண்டு போராடு என்ற உத்வேக வார்த்தைக்கு ஏற்றவகையில் இருக்கிறது ராகுல் காந்தியின் அரசியல் பயணம்.

2013-ல் ஊழல் குற்றச்சாட்டுகளால் உருக்குலைய தொடங்கியது காங்கிரஸ் கூட்டணி... அவ்வாண்டு இறுதியில் நடந்த தேர்தல்களில் தோல்வியுடன் காங்கிரசின் பயணம் தொடங்கியது...

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற பிரசாரத்தை மோடி தொடங்க, 2014-ல் மத்தியில் அரியணையை இழந்தது காங்கிரஸ். அப்போதும் சரி, 2019 தேர்தலிலும் சரி காங்கிரசுக்கு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை.

அமேதியிலே ராகுல் காந்தி தோற்கும் நிலை ஏற்பட்டது

மறுபுறம் மாநிலங்களில் எல்லாம் தொடர் தோல்வி... சிறு ஆறுதலாக சில மாநிலங்களில் வென்றாலும் ஆட்சியை தொடர முடியாதவகையில் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக உட்கட்சி பூசல் வெடித்தது.

பப்பு என்ற பிரசாரம் அவரை முதிர்ச்சியில்லா தலைவராக காட்ட முன்னெடுக்கப்பட்டது.

இதையெல்லாம் தாண்டி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியபோது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது ராஜஸ்தானும், சத்தீஷ்கரும்தான்..

இதில் ராஜஸ்தானும் கையைவிட்டு நழுவுமா என்ற சூழலில் குமரியில் தொடங்கிய யாத்திரையை காஷ்மீரில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார் ராகுல் காந்தி...

மக்களுடன் உரையாடல், சிறார்களுடன் விளையாட்டு, நடனம், முதிர்ச்சியான பேச்சுக்கள் என மக்களை கவர்ந்தார் ராகுல் காந்தி...

இதற்கிடையே நடந்த இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. ஆனால் குஜராத்தில் தோல்வியை தழுவியது. ஆம் ஆத்மி எச்சரிக்கையாக எழுந்த நிலையில், ராகுல் பொறுப்பை தவிர்த்துவிட்டார் என்ற விமர்சனங்களும் எழுந்தது. வெறுப்பு எனும் சந்தையில் அன்பு என்ற கடையை திறக்கிறேன் என்றவர், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்... பப்பு என்றழைப்பதும் மகிழ்ச்சியே என்றார் ராகுல்...

10 ஆண்டுகள் தொடர் தோல்வி விரட்டினாலும் தன்னுடைய போராட்டத்திலிருந்து பின்வாங்காத நெஞ்சுறுதி அவரது பயணத்தில் தெரிந்தது. பொருளாதார சமத்துவமின்மை மற்றும் மத பிளவுகளிலிருந்து நாட்டை இணைப்பதே யாத்திரையின் நோக்கம் என்றது காங்கிரஸ்...

நோக்கம் அரசியல் லாபம் தேடுவதல்ல என காங்கிரஸ் சொன்னாலும், ராகுலை பிரதமர் வேட்பாளராக்க யாத்திரை ஒரு முன் ஏற்பாடு என்றார்கள் அரசியல் பார்வையாளர்கள்

யாத்திரை அவரது இமேஜை மாற்றியிருக்கிறதா...? மக்களிடம் செல்வாக்கை பெற்றுக்கொடுத்திருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

ராகுல் எனும் ஆளுமைக்குள் மாற்றம் உறுதியாகியிருக்கிறது என்பது அவரது நெருக்கமானவர்களின் கருத்து. மொத்தத்தில் ராகுல் இமேஜை யாத்திரை கூட்டிவிட்டது என்பதுதான் பார்வையாக இருக்கிறது. ஆனால் ஆளுமையில் மோடிக்கு மாற்று என நிரூபித்துவிட்டாரா? ராகுல் இமேஜ் காங்கிரசுக்கு பயனளிக்குமா? என்றால், அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

ஆம் செல்வாக்கை எல்லாம் வாக்காக மாற்றுவதில் பலமுறை காங்கிரசும் கோட்டைவிட்டுள்ளது என்பது வரலாறு சொல்லும் பதிலாகும்.

பிரதமர் பதவி கனவுடன் பிராந்திய கட்சிகள் எல்லாம் சவாலாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரணிக்கு தலைமையேற்க வரும் தேர்தல்களில் செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ்.

இதற்கு வாய்ப்பாக வரும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலங்கானாவில் உட்கட்சி பூசலை சமாளித்து ராகுலின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பது முக்கியம் பெறுகிறது.

இதனை நோக்கி நகரும் காங்கிரஸ், கையோடு கைகளை கோருங்கள் யாத்திரைக்கு தயாராகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்