உடலுறவு சீனில் பகவத் கீதை.. ஓப்பன்ஹெய்மர் படத்தில் கொளுத்தி போட்ட நோலன்.. கொதிக்கும் இந்தியா

x

ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தில் பாலுறவு காட்சியில் பகவத் கீதை இடம்பெற்றது இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஓப்பன்ஹெய்மர்... இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை அமெரிக்காவின் காலில் விழ வைத்தவர் என்றால் மிகையல்ல...

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியை நரகமாக்கிய பேரழிவுக்கு காரணமான அணு குண்டை கண்டுபிடித்தவர்.

உலகை அழிக்கவல்ல ஆயுதமான அணுகுண்டை தயாரித்தவர், பின்னர் அதனாலே மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ என ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்.

அப்படிப்பட்ட சமயங்களில் எல்லாம் அவர் குறிப்பிட்டது பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுனனுடன் பேசியபோது, நானே காலம்.... உலகங்களை அழிக்க வந்த காலதேவன் என்ற வரியைதான்...

ஏராளமான புத்தகங்களை படித்து அறிவுத் தேடலை வலுப்படுத்திய ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதையையும் படித்தார், அதற்காக சமஸ்கிருத மொழியையும் கற்றார் என்பது வரலாற்று தகவல்...

ஓப்பன்ஹெய்மர் கீதையை குறிப்பிட்டு பலமுறை பேசியிருக்கிறார். பல சமயங்களில் உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன் எனவும் பேசியிருக்கிறார் ஒப்பன்ஹெய்மர்...

உலகில் அணுகுண்டின் தந்தை என அறியப்படும் ஓப்பன்ஹெய்மரின் பயோபிக், இப்போது இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பில் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது வீசப்பட்ட அணு ஆயுதங்களின் ஆரம்பக்கட்ட சோதனை பற்றியும், அணு ஆயுத சோதனையை செய்த அணு ஆயுத விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிராந்திய மொழியிலும் வெளியாகியிருக்கும் ஹாலிவுட் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. படத்தில் திரைப்படத்தில் பாலுறவு காட்சியில் பகவத் கீதை காட்டப்பட்டது இந்தியாவில் எதிர்ப்பை சந்தித்துள்ளது. படத்தில் ஓப்பன்ஹெய்மருடனான பாலுறவுக்கு பிறகு, அவரது அலமாரியிலிருந்து சமஸ்கிருத பகவத்கீதையை இளம்பெண் காண்கிறார்.

புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்து காண்பிக்கலாமா என ஓப்பன்ஹெய்மரிடம் கேட்கும் காட்சி உள்ளது. பின்னர் ஓப்பன்ஹெய்மர் தமக்கு மிகவும் பிடித்த பகவத் கீதையின் வரிகளை படித்து விளக்குகிறார். நான் இப்போது உலகங்களை அழிக்கும் எமனாக மாறிவிட்டேன் என்பதை குறிப்பிடுகிறார்.

இந்த காட்சியமைப்புக்கு இந்தியாவில் எதிர்ப்பலை எழுந்துள்ளது. நாயகனும்-நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சியில் எப்படி இந்த வரிகள் இடம்பெறலாம் எனவும் கேள்வியை எழுப்புகிறார்கள் இணையவாசிகள்...

பகவத் கீதையை காட்டிய விதம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யும் இணையவாசிகள், மத்திய திரைப்பட தணிக்கை குழு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். R ரேட் ஹாலிவுட் படமான ஓப்பன்ஹெய்மர் இந்தியாவில் பல காட்சிகள் வெட்டப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பகவத் கீதை தொடர்பான காட்சிகள் கத்தரிக்கப்படாதது வேதனைக்குரியது எனக் கூறும் இணையவாசிகள், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இதற்காக அவமானப்பட வேண்டும் என காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்