நாட்டையே உலுக்கிய பசி படுகொலை... மனசாட்சியை தட்டி எழுப்பிய ஒரு வீடியோ- இறந்த 'அட்டப்பாடி மதுவுக்கு' கிடைத்த நீதி
- நாட்டையே உலுக்கிய ஒரு கோர சம்பவம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி கேரளாவில் அரங்கேறியது. கேரள மாநிலம் அட்டப்பாடி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. 27 வயதே ஆன அந்த இளைஞர், பல நாட்கள் உணவில்லாமல், பசியால் வாடி வந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மளிகைக் கடையில், அரிசி திருடியதாக கூறப்படுகிறது.
- இதனைக் கண்ட ஒரு கும்பல், அந்த இளைஞரை கட்டிவைத்து அடித்தே கொன்றது. அப்பாவி இளைஞர் மதுவை அடித்துப் படுகொலை செய்யும் காட்சிகளை, கொடூர மனம் கொண்ட கும்பல், வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது, நாடு முழுவதும் வேதனை கலந்த அதிர்வலையை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தில் 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மதுவின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தியபோது, உடலில் ஒரு சிறு உணவும் இல்லாமல், பட்டினியால் வாடி வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- நாட்டையே உலுக்கிய சம்பவம் என்பதால், இந்த உண்மை சம்பவத்தை தழுவி, மது கேரக்டரில் பகத் பாசில் நடிக்க இருந்த படம், வழக்கு விசாரணையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது.
- இந்த வழக்கு மன்னார்காடு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்ததால், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
- பல்வேறு இடையூறுகளை சந்தித்து, 5 ஆண்டுகளாக நடைபெற்று இந்த வழக்கிற்கு, தற்போது ஒரு முடிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- மன்னார்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், கைதான 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- அதன்படி, ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், அப்துல் கரீம் உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அனீஷ், அப்துல் கரீம் ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது.
- தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியாரின் பாடல் வரிக்கு ஏற்றாற்போல, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு, ஆறுதல் அளிப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
Next Story