அரி கொம்பனின் அடுத்த இலக்கு? -நெல்லை, குமரி மக்கள் கலக்கம் -யானைக்கு எல்லை தெரியாது காடு தான் தெரியும்?

x

கோதையாறு அருகே உள்ள முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பனின் அடுத்தக்கட்ட நகர்வுகளை நெல்லை, குமரி மாவட்ட மலையோர கிராம மக்கள் மட்டுமல்லாமல், கேரளவைச் சேர்ந்த மலை கிராம மக்களும் அச்சத்துடன், உற்று கவனித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக கோதை ஆறு அருகே முத்துக்குளி வயல் என்னும் பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டுள்ளனர்.


அரிக்கொம்பனின் நகர்வுகள் இனி எப்படி இருக்கும் என்ற கேள்விகள் நெல்லை மாவட்ட வனப்பகுதியை சார்ந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்ட மலையோர மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாரில் இருந்து 13 கி.மீ தூரம் தான் முத்துகுளி. சில மணி நேரத்திலேயே அப்பர் கோதையார் E.B குடியிருப்புக்கு அரிக்கொம்பன் நினைத்தால் வந்து விட முடியும். அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.

முத்துகுளியில் இருந்து அப்படியே மேற்கு பக்கமா கொஞ்சதூரம் நடந்தால், குமரி மாவட்டம் பாலமோர் எஸ்டேட் குடியிருப்பிற்கு செல்ல வாய்ப்பிருக்கு. அப்படியே மாறாமலை, காளிகேசம், கீரிப்பாறை வரைக்கும் வந்தாலும், வருவார் அரிக்கொம்பர்.


குறுக்கு வெட்டு சரிவுகளை கடந்து சென்றால் ஒரு மணி நேரத்தில் அரிக்கொம்பனால் லோயர் கோதையாரை அடைந்துவிட முடியும். கோதையாரை சுற்றி குற்றியாறு, கிழவியாறு, மோதிராமலை என்று பத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட வன கிராமங்கள் இருக்கிறது.

தமிழ்நாடு பக்கமே இனி தலைவைத்து படுக்க மாட்டேன்னு அரிக்கொம்பன் நினைத்தால் தெற்கு பக்கமா கொஞ்சம் காலார நடந்தால் போதும்.... கேரளாவின் நெய்யாறு வனப்பகுதி வந்துவிடும். அப்படியே விதுரா,நெடுமங்காடு, காட்டாகடை ன்னு ஊருக்குள்ள புகுந்து போகவும் வாய்ப்பிருக்கு.

அப்படியே கேரளா பக்கம் போய்விட்டால் நமக்கு தொல்லை விட்டது என்று தமிழக வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் எங்கே செல்ல வேண்டும் என்பதை அரிக்கொம்பன் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

மொத்தத்தில் அரிக்கொம்பனின் அடுத்தக்கட்ட நகர்வுகளை மிகுந்த அச்சத்துடன் நெல்லை, குமரி மாவட்ட மலையோரம் மக்கள் மட்டுமல்லாமல் கேரளவைச் சேர்ந்த மலை கிராம மக்களும் உற்று கவனித்து வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்