மணல் கொள்ளையர்களுடன் காவலர்களுக்கு தொடர்பா? குற்றவாளிகளை தப்ப விட்டதாக குற்றச்சாட்டு

விழுப்புரத்தில், தனிப்படை போலீசார் பிடித்து கொடுத்த மணல் கொள்ளையர்களை, அரகண்டநல்லூர் காவல்நிலைய போலீசார் தப்பிக்கவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொண்டூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில், தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபனுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் திடீரென தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பில்ராம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை, புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, ராஜி, பிரகாஷ், புஷ்பவேல் ஆகிய 6 பேர், மாட்டுவண்டியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகளை பிடித்து அரகண்டநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீசார் முறையாக விசாரணை செய்யாமல் குற்றவாளிகளை தப்ப விட்டதாக கூறப்படுகிறது. மணல் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருக்கும் காவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com