இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி - யார் இந்த முலாயம் சிங் யாதவ்?

x

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு மத்தியப் பகுதியான எட்டா வாவில், பின்தங்கிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த முலாயம் சிங்குக்கு, மல்யுத்த வீரனாவதே விருப்பம். ஆக்ரா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் முடித்தார்.

வட நாட்டுத் தலைவர் ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டவர், இந்துமதத்தில் உள்ள பின்தங்கிய சமூகத்தினர், சிறுபான்மையினருக்கான அரசியலில் இறங்குவது என்று தீர்மானித்தார்.

1967ல் உ.பி. சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1974ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். இரண்டாவது பதவிக் காலத்தின்போது, 19 மாதங்கள் அவசரநிலை சிறைவாசம் அனுபவித்தார். 1977 தேர்தலில் வென்று மீண்டும் சட்டப் பேரவைக்குத் திரும்பியவர், லோக் தள் கட்சியின் தலைவராக வும் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்ட நிலையில், 1980ல் ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவராகப் பதவியேற்றார். சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுப்போனவர், 82ஆம் ஆண்டு சட்டமேலவைத் தேர்தலில் வென்று, 3 ஆண்டுகள் வரை எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.

1985 முதல் 87வரை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1989ல் பாஜகவின் ஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார், முலாயம் சிங்.

ஓராண்டில் பாஜக தன் ஆதரவை வாபஸ்பெற்ற நிலையில், பாபர் மசூதி இடிப்பு அரங்கேறியது. காங்கிரஸ் கட்சியும் தன் ஆதரவை விலக்க...1991ல் முலாயம் சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது.

1992 அக்டோபரில் சமாஜ்வாதி கட்சியைத் தோற்றுவித்த முலாயம் சிங்குக்கு, இசுலாமியர்களிடம் ஆதரவு பெருகியது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் முதலமைச்சரானார்.

பாஜகவுடன் கைகோர்த்து முலாயம் ஆட்சியை பகுஜன் சமாஜ் கட்சி கவிழ்க்க...1996 மக்களவைத் தேர்தலில் வென்று தேசிய அரசியலில் கால் பதித்தார், முலாயம். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பிரதமர் ரேசில் இடம்பிடித்தார். அரசியல் நகர்வுகளில் தேவகவுடா பிரதமர் பதவியை தட்டிச்செல்ல, பாதுகாப்புத்துறை அமைச்சரானார் முலாயம்சிங். 1998, 99 தேர்தல்களிலும் மக்களவை எம்.பி.யாகத் தொடர்ந்தார்.

2002ல் உ.பி.யில் ஆட்சியில் அமர்ந்த பாஜக - பகுஜன் சமாஜ் ஆட்சி, ஓராண்டில் விரிசல் கண்டது. மற்ற பல கட்சிகளின் ஆதரவுடன் 3 ஆம் முறையாக முதலமைச்சராகப் பதவியேற் றார், முலாயம் சிங்.

2007 சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு செல்வாக்கு சரிய... எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். மீண்டும் தேசிய அரசியலுக்குத் தாவியவர், 2009ல் மக்களவை உறுப்பினரானார்.

2012 சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு பெருவெற்றி கிடைக்க... முதலமைச்சர் நாற்காலியில் தன் மகன் அகிலேசை அமரவைத்தார், முலாயம். 2014ல் மீண்டும் மக்களவைக்குத் தேர்வானார்.

இதனிடையே, கட்சியில் அகிலேசுக்கும் முலாயமின் தம்பி சிவ்பாலுக்கும் இடையே முட்டல் மோதல் உச்சத்துக்குச் சென்றது. தம்பி பக்கம் நின்ற முலாயம், கட்சியின் தலைமைக் காப்பாளராக உயர்த்தி, தனித்து வைக்கப்பட்டார்.

தேசிய அரசியலே களம் என்று ஆகிப்போனவர், 2019 மக்களவைத் தேர்தலிலும் வென்றார்.

10 முறை எம்.எல்.ஏ., 7 முறை எம்.பி., ஒரு முறை எம்.எல்.சி. என இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் முலாயம்சிங் யாதவ்.


Next Story

மேலும் செய்திகள்