வேறு சமூகத்து பெண்ணை மணந்ததால்..30 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம் - தந்தையின் இறுதி சடங்கிற்காக...திண்டுக்கல்லில் அரங்கேறிய தீண்டாமை

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கூம்பூர் பழைய மாரப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு வேறு சமூகத்தை சேர்ந்த லட்சுமி என்பவருடன் காதல் ஏற்ட்டு, அவரையே திருமணம் செய்து கொண்டார் பழனிச்சாமி...

அதன் பின்னர், தனது மனைவி லட்சுமியுடன் சொந்த ஊரான பழைய மாரப்பன்பட்டிக்கு பழனிச்சாமி வந்தபோது, வேறு சமூகத்து பெண் என்பதால், இருவரையும் ஊருக்குள் அனுமதிக்க மறுத்து, அவர்களை கிராம மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.

கனவுகளுடன் சொந்த ஊருக்கு திரும்பிய பழனிச்சாமிக்கு, ஊர் மக்களின் செயல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. வாழ்க்கையை நடத்திட வேண்டும் என்பதால், கூம்பூர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, வீட்டின் முன்பே சர்பத் கடை ஒன்றை நடத்தி வருகிறார் பழனிச்சாமி.

30 ஆண்டுகள் கடந்த பிறகும், சொந்த கிராமத்திற்கு பழனிச்சாமி செல்வதற்கு இன்னும் எதிர்ப்பு நிலவுகிறது.

பழனிச்சாமி கலப்பு திருமணம் செய்த காரணத்தால், அவரிடம் தலைக்கட்டு வரி வசூலிக்க கிராம நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் அதே கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமியின் தந்தையிடம் தொடர்ந்து வரி வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பழனிச்சாமியின் தந்தை உயிரிழந்த போதிலும், இறுதிச் சடங்கு செய்வதற்கு பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஊருக்குள் வருவதற்கு, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பழனிச்சாமி, கூம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தந்தையின் இறுதிச் சடங்கு செய்வதற்கு, ஊர் முக்கியஸ்தவர்கள் வரவேண்டும் என அனைவரின் காலிலும் விழுந்து கதறி அழுதுள்ளார் பழனிச்சாமி. ஆனாலும் ஊர் கட்டுப்பாட்டை மீறி உடலை அடக்கம் செய்ய யாரும் வராததால், வேறு வழியின்றி பழனிச்சாமி அவரது தாய், மனைவி மற்றும் தம்பியுடன் சேர்ந்து தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிராமத்தில் உள்ள வீட்டில் பல ஆண்டுகளாக பழனிச்சாமி வசிக்காததால், அருகே உள்ளவர்கள் பழனிச்சாமியின் இடத்தில் கழிப்பறை அமைத்ததோடு வீட்டிற்குச் செல்ல முடியாதவாறு வழியையும் அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பழனிச்சாமி, கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தும் 'நீ தலைகட்டு வரி செலுத்தவில்லை; உனக்கு உறுதுணையாக யாரும் வரமாட்டோம். உன்னுடைய பிரச்சனையை நீ தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பழனிச்சாமி தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்போது தனது தாயும் கஷ்டப்பட்டு வருவதால், தனது சொந்த கிராமத்தில் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"என் அம்மா வாழ்ந்த சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்கிறார்"

"நானும் எனது சொந்த கிராமத்தில் வாழ வேண்டும்"

"எனது மகனும் அதே கிராமத்தில் வாழ வேண்டும்"

"எங்களுக்கு அரசு உதவி புரிய வேண்டும்"

தீண்டாமையால், ஒரு குடும்பம் படும் பாடு என்பது, இந்த சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது.


Next Story

மேலும் செய்திகள்