தூண்டிலில் வசமாக சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்... 'நாகப்பாம்புவால்' கிடைத்த முக்கிய க்ளூ..!பரபரப்பு கிளப்பிய 'நாகப்பாம்பு'

x

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் வழக்குப்பதியப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷின் சமீபத்திய சர்ச்சை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

பொதுமக்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பேரிடம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

ஆருத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூசோ, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்கி வந்த திரைப்படத்தை தயாரித்ததும், ஆருத்ரா மூலமாக பெறப்பட்ட மோசடி பணத்தை ஆர்.கே.சுரேஷிடம் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ரூசோவிற்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் குறுகிய கால இடைவெளியில் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணபரிவர்த்தனை நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்யக்கோரி விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுப்பியுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக அவர் துபாயில் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது‌. ஆருத்ரா மோசடி குறித்து சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஆர்.கே.சுரேஷ் குறித்தான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த எல்ஃபின் நிதி நிறுவனம் சுமார் 7,000 பேரிடம் 6,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிதி நிறுவனத்திடம் இருந்தும் ஆர்.கே.சுரேஷ் மோசடி பணத்தை பெற்று இருக்கிறாரா என்ற சந்தேகம் பொருளாதார குற்றப்பிரிவினருக்கு எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆர்.கே.சுரேஷின் அலுவலகம், அங்கு வேலை பார்த்த பணியாளர்கள், நண்பர்கள், வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் என அனைத்து தரப்பினரிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் ட்விட்டர் பக்கத்தில் ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் நாகப்பாம்பு புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷின் இந்த திடீர் நாகப்பாம்பு பதிவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பொருளாதார குற்றப்பிரிவில் போலீசாரின் கண்களில் சிக்கிய இந்த பதிவை தொடர்ந்து ஆர் கே சுரேஷின் ட்விட்டர் கணக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது ? எந்த ஐபி அட்ரஸிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது? இதனை சுரேஷ் இயக்கி உள்ளாரா அல்லது அவருடைய நண்பர்கள் யாரேனும் இயக்கி வருகிறார்களா என பல கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆர் கே சுரேஷ் இருக்கும் இடம் குறித்து கடந்த ஐந்து மாதமாக எந்த தகவலும் கிடைக்காமல் இருந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு இந்த நாகப்பாம்பு ட்விட்டர் ஒரு ட்விஸ்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை


Next Story

மேலும் செய்திகள்