மருந்தகத்தில் கருக்கலைப்பு... கர்ப்பிணி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் - மருந்தக உரிமையாளர் கைது

x

தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த நிலையில், மருந்தக உரிமையாளர் வடிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அமுதா தம்பதி. இத்தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக அமுதா கருவுற்றதாக தெரிகிறது. கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என அமுதா ஸ்கேன் செய்து பார்த்ததாகவும், அதில் பெண் குழந்தை என தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. மூன்றாவதும் பெண் குழந்தையா என மன உளைச்சலுக்கு ஆளான அமுதா, கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூர் தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக் கலைப்பு செய்துள்ளார். இந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக அமுதா திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அமுதாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மருந்தக உரிமையாளர் வடிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்