அவமானங்களை உரமாக்கிய கெஜ்ரிவால்..தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி

x

ஆம் ஆத்மி தேசிய கட்சியானது எப்படி...?


அவமானங்களை உரமாக்கிய கெஜ்ரிவால்..தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி - இனி பாஜக போல எல்லா சலுகைகளும் கிடைக்கும்..!

தேசியக் கட்சி அங்கீகாரத்தை பெற்ற கெஜ்ரிவால் கட்சிக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள் என்ன...?


கெஜ்ரிவால் , காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. டெல்லியில் வருமான வரி ஆணைய அலுவலத்தில் பணியாற்றிய போதே, ஊழலுக்கு எதிராக போராடியவர். ஊழலுக்கு எதிராக போராட்டம், விழிப்புணர்வு என தனது பாதையை வகுத்தவர். 2011-ல் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அந்த போராட்டத்தில் மக்கள் கவனத்தை பெற்றவர், 2012-ல் ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அளவற்ற ஏளனத்திற்கு உள்ளானார்.

ஆனால் அவமானங்களை எல்லாம் அடி உரமாக்கி 2013 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 23 இடங்களை பிடித்தார். அதே மக்கள் ஆதரவுடன் அங்கு 2015-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அரியணை ஏறிய ஆம் ஆத்மி, 2020 தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்றது.

2022 பிப்ரவரியில் பஞ்சாப் தேர்தலிலும் அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது.

2022 மார்ச் மாதம் கோவா தேர்தலில் 6.77 சதவீத வாக்கை பெற்றதுடன், 2 இடங்களில் வென்றது. அதனைத் தொடர்ந்து குஜராத் தேர்தலில், 12.9 சதவீத வாக்குகளை பெற்று 5 இடங்களை வென்ற ஆம் ஆத்மி, தேசியக் கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது. இப்போது அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

தேசியக் கட்சியாக ஒரு கட்சியை அறிவிக்க தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வாக்கு வங்கி, வெற்றி நிலவரம் அடிப்படையில் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடிப்படையில் மூன்று மாநிலங்களில் 2% சதவீத மக்களவை தொகுதிகளை, அதாவது 11 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் அடிப்படையில் பார்க்கையில் ஒரு கட்சி 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். 4 மாநிலங்களிலும் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் டெல்லி, பஞ்சாப், கோவாவை அடுத்து குஜராத்தில் தடம் பதித்த ஆம் ஆத்மி தேசியக் கட்சிக்கான தகுதியை பெற்றது.

இப்போது தேர்தல் ஆணையம் தேசியக் கட்சியாக அங்கீகரித்திருக்கும் கெஜ்ரிவால் கட்சிக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

இந்தியா முழுவதும் துடைப்பம் சின்னம் பெறலாம். தேர்தல்களில் 40 நட்சத்திர பேச்சாளர்களை கொண்டிருக்கலாம். இவர்களது பயண செலவு வேட்பாளர் கணக்கில் கணக்கிடப்படாது. கட்சி தலைமையகத்தை கட்ட அரசாங்க நிலத்தை பெறவும் தகுதி பெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே ஒரு முன்மொழிபவர் மட்டும் போதுமானது.

பொதுத் தேர்தல்களில் ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷனில் பிரசாரம் செய்யவும் நேரம் ஒதுக்கப்படும். இதுபோன்ற பிற சலுகைகளும் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும்.


Next Story

மேலும் செய்திகள்