"எங்கள பாத்தா இளக்காரமா இருக்கா?" - வன்மத்தோடு காத்திருந்து காஞ்சிபுரம் நபரை தீர்த்து கட்டிய வடமாநில இளைஞர்

x

காஞ்சிபுரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பீகார் இளைஞர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ். இவரும் வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த ராம் என்பவரும், ஓரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளனர்...

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரவு டாஸ்மாக்கை பூட்டி விட்டு வீடு திரும்பிய இருவரையும், மர்மநபர்கள் இருவர் சுற்றி வளைத்தனர்...

இருவரும் கூர்மையான ஆயுதங்களால் துளசிதாஸை கொடூரமாக தாக்க ஆரம்பித்த நிலையில், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராம் தடுக்க சென்ற போது, அவரை இருவரும் துப்பாக்கியால் சுட்டு தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இதில், சம்பவ இடத்திலேயே துளசிதாஸ் துடிதுடிக்க உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமை, அவரது முதுகில் பாய்ந்திருந்த துப்பாக்கி தோட்டாவை அகற்றி மருத்துவர்கள் காப்பாற்றினர்.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், கடந்த 2021 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய கூட்டாளியான பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார் ராமுடன் சேர்ந்து துளசிதாஸை இருவரும் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது...

தொடர்ந்து உமேஷ்குமாரின் கூட்டாளியான அரவிந்த் குமார் ராமை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், இரண்டு வருடங்களுக்கு பிறகு பீகாரில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர் போலீசில் அளித்த வாக்குமூலமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

சம்பவத்தன்று துளசிதாஸ் பணிபுரிந்து வந்த ஓரகடம் டாஸ்மாக்கில் உமேஷ்குமார் மதுவாங்க சென்றுள்ளார்.. அப்போது, மது பாட்டிலுக்கு 10 ரூபாய் துளசிதாஸ் கூடுதலாக கேட்டதாக தெரிகிறது. இது குறித்து கேட்ட உமேஷ்குமாரை, வட மாநில இளைஞர் என்பதால் துளசிதாஸ் ஒருமையில் பேசியதாகவும், அவரது குடும்பத்தினரை இழிவாக திட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரத்தில் இருந்த உமேஷ்குமார், துளசிதாஸை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்டிய நிலையில், பீகார் சென்று அங்கிருந்து துப்பாக்கி வாங்கி வந்திருக்கிறார்... இதை தன்னுடன் பணிபுரியும் அரவிந்த் குமார் ராமுடன் தெரியப்படுத்தி, அவரையும் சதித்திட்டத்தில் கூட்டு சேர்ந்து துளசிதாஸை உமேஷ்குமார் கொலை செய்தது தெரியவந்தது...

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான உமேஷ்குமாரை ஏற்கெனவே கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், இரண்டு வருடங்களாக தனிப்படை அமைத்து தேடி வந்த அரவிந்த் குமார் ராமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்ட டாஸ்மாக் ஊழியரை இரு வட மாநில இளைஞர்கள் கொலை செய்ததோடு 2 வருடங்களுக்கு பிறகு இந்த சம்பவத்தில் நடந்திருக்கும் அடுத்த கட்ட கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்