மாஃபியாக்கள் வலையில் 'தமிழக' அதிகாரி.. நேர்மைக்கு பரிசு சிறை.. தலைகீழான வாழ்க்கை

x

சிம்ம சொப்பனம்... இந்த வார்த்தையை நம்மில் பலரும் அறிந்திருப்போம்... சிங்கம் தன்னை தாக்குவது போல் கனவு காணும் யானை, கனவு கலைந்து எழுந்த பின்பும் சில நாட்கள் பயத்துடனே இருக்குமாம்... அதுபோல, இந்தியாவில் குருவிகளுக்கு சிம்ம சொப்பனமாக, அவர்களின் தூக்கத்தை கெடுத்து, அவர்களை நடுக்கம் காண வைத்தவர் தான் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி ராஜன்... இந்திய வருவாய் துறையில் 1980 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய ராஜன், கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக 2012 ஆம் ஆண்டு வரை பல உயர் பதவிகளை வகித்து வந்தார்...

2010 ஆம் ஆண்டு ராஜன் தலைமையிலான வருவாய் புலனாய்வு துறையினர், தங்கத்தில் பதிக்கக்கூடிய ஆபரண கற்களை சட்டவிரோதமாக கடத்திய ஸ்டாலின் ஜோசப் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 200 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது...

வரி ஏய்ப்பை காரணம் காட்டி ராஜன் முடக்கிய நிறுவனங்கள், தங்களை அதிலிருந்து விடுவிக்க 10 லட்ச ரூபாய் பணத்தை ராஜன் லஞ்சமாக கேட்டதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதற்கு முன்பணமாக 2 லட்ச ரூபாயை ராஜன் வாங்க உள்ளதாகவும் சிபிஐக்கு தகவல் அளித்தனர்...

இதனால், ராஜனை சிபிஐ மறைமுகமாக கண்காணித்து வந்த நிலையில், குருவிகளின் சதித் திட்டத்தின் படி ராஜனின் கார் ஓட்டுநர் மூலம், அவரது வீட்டிற்குள் 2 லட்ச ரூபாய் பணம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது...

கையில் ஸ்வீட் பாக்ஸூடன் வீட்டிற்குள் ஓட்டுநர் வருவதை கண்ட ராஜன், அது குறித்து சந்தேகத்துடன் விசாரித்ததோடு அந்த ஸ்வீட் பாக்ஸை கொடுத்தவரிடமே திரும்ப கொடுத்து விடுமாறு கூறியிருக்கிறார்...

இந்நிலையில், பணத்துடன் வீட்டினுள் இருந்து வெளியே வந்த ஓட்டுநரை, சினிமா காட்சியை மிஞ்சுவது போல சிபிஐ அதிகாரிகள் என்ட்ரி கொடுத்து பிடித்தனர்...அவ்வளவுதான் குருவிகளின் திட்டம் கிட்டத்தட்ட நிறைவேறிய கதைதான்.. சதி வலையில் சிக்கிய ராஜன் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்...வருவாய் புலனாய்வு துறையானது நிதி அமைச்சகத்தின் கீழ் வருவதால் நிதி அமைச்சர் அனுமதி அளித்தால் மட்டுமே ஐஆர்எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க முடியும். இந்த சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இதற்கு அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்