தன் வீட்டைக் காக்க கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கிய தம்பதி... கான்கிரீட் கலவையை மேலே ஊற்றிய ஒப்பந்ததாரர் - அதிர்ச்சி சம்பவமும்... அதிரடி நடவடிக்கையும்...

x

கரூரில், கழிவு நீர் வடிகால் கால்வாய் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி மீது, ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையை கொட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கரூர் மாநகராட்சி ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில் பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த தெருவில் கோமதி என்பவரின் வீட்டை யொட்டி, பாதாள சாக்கடை கட்ட பள்ளம் தோண்டியபோது, வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டு, அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்களான பாலசந்தர் - கோமதி தம்பதி, வீடு வலுவிழந்துள்ளதால், உள்பக்கமாக தாங்கி பிடிப்பதற்காக, கான்கிரீட் கலவை வைத்து சரிசெய்து தருமாறு கேட்டுள்ளனர்.

செய்த தவறையும் சற்றும் பொருட்படுத்தாத ஒப்பந்ததாரர், கான்கிரீட் கலவை வைத்து வீட்டை சரி செய்து தர வேண்டுமானால், அதற்கு 43 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என தம்பதியிடம் கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலசந்தர் மற்றும் அவரது மனைவி கோமதி, நியாயம் கேட்டு, கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை சற்றும் பொருட்படுத்தாத ஒப்பந்ததாரர், தம்பதி மீது, வேண்டுமென்றே கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியவாறு பணியில் ஈடுபட்டது, அங்கிருந்தவர்களை கோபத்திற்கு ஆளாக்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமன்ற உறுப்பினர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

மேலும், ஒப்பந்ததாரரை எச்சரித்து, வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டதை அடுத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்