27 நிமிடத்தில் 64 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (25.04.2023)

x

12 மணி நேர வேலை தொடர்பான, சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என தனது அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வணிக வளாகம் அல்லாத திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாறும் சிறப்பு உரிமத்தை தமிழக அரசு நீக்கியுள்ளது. திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு அரங்குகள், கூட்ட அரங்குகள், தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற தற்காலிக உரிமம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா புரட்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க ஊர்வலமாக வந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம் என்றும் , அது ஆயிரம் காலத்து பயிராக வளர்ந்து எவராலும் அழிக்க முடியாத இயக்கமாக உள்ளதாகவும் கூறினார்.

வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கமளித்திருக்கும் ஜி-ஸ்கொயர் நிறுவனம், தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.வெளிப்படை தன்மையுடன் இயங்கும்போது, எதையும் மறைக்கவோ, எதை கண்டும் அஞ்சவோ அவசியம் இல்லை என ஜி ஸ்கொயர் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் வாயிலாக நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீங்கிழைக்கும் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்