33 நிமிடத்தில் 61 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துறை சார்ந்த திட்டங்கள், சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்ய சிறப்பு சட்டம் அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பல்லாயிரம் ஆண்டு அழுக்கை சில ஆண்டுகளில் சரி செய்ய முடியாது என்று கூறினார்.

சென்னையில் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, மதுக்கடைகளின் நேரத்தை குறைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர் கேட்டபோது, கடைத் திறந்தால் குடிக்க வேண்டுமா என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். 63 வயதாகும் நிலையில், இதுவரை தான் மது குடித்ததில்லை என்றும் அவர் கூறினார். மேலும், கோடையில் மது அருந்தினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

பாஜகவிற்கு ஒரு போதும் பயப்பட மாட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தமக்கு எதிராக எது நடந்தாலும் நான் நானாக இருப்பேன் என கூறியுள்ளார். வயநாடு தொகுதி எம்.பியாக இருந்தாலும் இல்லாவிட்டலும் மக்களுக்காக போராடுவேன் என்றும், நாட்டில் வீடு இல்லாமல் இருக்கும் பலரில் தாமும் ஒருவன் என்றும்கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, கேள்வி கேட்பவர்களை, அவமானப்படுத்தவும் தாக்கவும் பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தின்படி, தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுப் பட்டியலை, தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு தயாரித்து வருகிறது. முதற்கட்டமாக, சென்னை சைபர் கிரைம் காவல்துறை, ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேம் விளையாடுபவர்களை கண்டறியவும் காவல்துறை திட்டம் வகுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்