எமனாக மாறிய சத்து மாத்திரை - குறும்பு தனத்தால் நேர்ந்த கோளாறு..’வைட்டமினால்’ மாணவிகளுக்கு வந்த வேதனை

x

நீலகிரி பள்ளியில் சத்து மாத்திரையை அதிகளவில் உட்கொண்டு, மாணவி இறந்த சம்பவம் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், மீண்டும் சத்து மாத்திரையை உட்கொண்ட 6 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது...


கடந்த சில தினங்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில், ஆசிரியருக்கே தெரியாமல், மேஜையில் இருந்த சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகளை, பள்ளிகளில் கவனமுடன் கையாள, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த ஒருசில தினங்களில், கன்னியாகுமரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத இருந்த மாணவி, வீட்டில் இருந்த சத்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எதற்கும் ஒரு அளவு இருப்பது போல, சத்து மாத்திரை தானே என அசால்டாக அதிகம் எடுத்துக் கொண்டதுதான், மாணவிகளின் இறப்பிற்கு காரணமாக அமைந்தது.

2 சம்பவங்களில் 2 மாணவிகள் உயிரை விட்ட நிலையில், ஆபத்தை உணராமல், மீண்டும் பள்ளி மாணவிகள் சத்து மாத்திரையை அதிகளவில் உட்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.

வியாழக்கிழமை அன்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் சமீபத்திய நீலகிரி சம்பவம் எதிரொலியாக, பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இந்த வாரம் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று வழக்கம்போல் தரப்படும் சத்து மாத்திரை கிடைக்காததால், குறும்புத்தனம் கொண்ட 6ம் வகுப்பு மாணவிகள் 6 பேர், ஆசிரியர் வகுப்பறையில் இல்லாத நேரத்தில், பீரோவில் இருந்த சத்து மாத்திரைகளை எடுத்து உட்கொண்டுள்ளனர். 6 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் 6 மாத்திரைகள் உட்கொண்ட நிலையில், மற்ற மாணவிகள் தலா 2 முதல் 3 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர்.

இதன் விளைவாக, மயக்கமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மாத்திரைகள் சாப்பிட்ட ஒரு மாணவி மட்டும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்ததுடன், மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

விட்டமின் குறைபாட்டால் உடலில் ஏற்படும் கோளாறுகளை தடுக்கவே, பள்ளிகளில் அரசு சார்பில், சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதன் தன்மையை உணராத மாணவர்கள், அது என்னவோ, மிட்டாய் போல எடுத்து வாயில் கொட்டிக் கொள்வது வேதனை அளிக்கிறது. இனிமேலும் பள்ளிகளில் உரிய கண்காணிப்பை மேற்கொண்டால் அடுத்த சம்பவம் நேராமல் தவிர்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்