28 நிமிடத்தில் 57 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். கான்சாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலமைச்சர் ஸ்டாலினை, ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும், ஜப்பான் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என்றார். மேலும், அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் டாஸ்மாக் கடைகளை மூடியிருப்போம் என முன்னாள் அமைச்சர் கூறினார்.

2024 - ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மாற்றம் தெரியும் என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் விருப்பம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மாட்டோம் என்றார். மேலும், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைப்போம் என சசிகலா நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க, மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த ஜெய்சுகின் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், குடியரசு தலைவரே நாடாளுமன்றத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் படைத்தவராக உள்ளபோது, குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில், தமிழ் கலாசாரப்படி பிரதமர் மோடி செங்கோலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவாரத்தில் கோளறு பதிகம் பாடப்பட்டு, 20 ஆதீனங்கள் சொங்கோலுக்கு புனிதநீர் தெளித்து பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளனர். பின்னர் மேள தாளங்கள் முழங்கள மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்