குகைக்குள் தனிமையில் 500 நாட்கள்.. டைம் டிராவல் செய்த 50 வயது பெண்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த மொமெண்ட்

x

விதவிதமாய் பரந்த வீடுகள் கட்டி ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள் நவீன கால மனிதர்கள்...

ஆனால் நாகரீகம் ஏதுமற்ற கற்காலத்தில் மனிதர்களும், இன்னபிற உயிரினங்களும் வாழ இயற்கையே அமைத்துக் கொடுத்த வீடு தான் குகை...

குகைக்குள்ளேயே தங்கி, உண்டு, பேசி, சிரித்து, இனத்தை பெருக்கி, நினைவுகளை ஓவியங்களாய் சேகரித்து வைத்து மகிழ்ந்தார்கள் கற்கால மனிதர்கள்...

மீண்டும் ஒருமுறை கற்காலம் போவோமா? என யோசித்து அதை நிகழ்த்தியும் காட்டி இருக்கிறார், ஸ்பெயினைச் சேர்ந்த 50 வயது வீராங்கனை ஒருவர்...

பியாட்ரிஸ் ஃப்ளாமினி Beatriz Flamini... விளையாட்டு மற்றும் மலையேற்ற வீரானனையான இவருக்கு வயது 50... உலக சாதனை முயற்சியாக தனது 48வது வயதில் பியாட்ரிஸ், ஸ்பெயினின் க்ரனடா தீவில் பூமிக்கடியில் சுமார் 230 அடி ஆழத்தில் அமைந்துள்ள குகைக்குள் செல்ல திட்டமிட்டார்...

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பியாட்ரிஸ், தான் சொன்னபடி குகைக்குள் சென்று விட்டார்...

2 கேமராக்கள், 1000 லிட்டர் தண்ணீர், 60 புத்தகங்களுடன் குகைக்குள் சென்ற பியாட்ரிசுக்கு துணை, பியாட்ரிஸ் மட்டும் தான்...

வெளி உலகத்துடன் தொடர்பே கிடையாது... உக்ரைன் போர், விலைவாசி உயர்வு, உணவுத் தட்டுப்பாடு, ராணி எலிசபெத் மறைவு உள்ளிட்ட எந்த முக்கியமான நிகழ்வுகளையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை...

உடற்பயிற்சி, படிப்பு, ஓவியம் வரைதல், கம்பளி பின்னுதல், அனுபவங்களைப் பதிவு செய்தல்... இது தான் பியாட்ரிசின் அன்றாட பணி...

தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் கேமரா மூலம் பியாட்ரிஸ் பிளாமினியின் ஒவ்வொரு அசைவையும் உளவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் உற்று கண்காணித்து வந்தனர்...

பியாட்ரிசின் அனுபவத்தை கிரனாடா மற்றும் அல்மேரியா பல்கலைக்கழகங்கள், மாட்ரிட்டை தளமாகக் கொண்ட ஸ்லீப் கிளினிக் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்...

தனிமைப்படுத்தலின் தாக்கம், நேரத்தைப் பற்றிய புரிதல், பூமிக்கடியில் வாழும்போது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நரம்பியல், அறிவாற்றல் மாற்றங்கள், தூக்கத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன...

ஏனெனில் குகைக்குள் வெளிச்சம் வர வாய்ப்பே இல்லை... ஆக அந்த 500 நாட்களும் உங்களால் சூரிய வெளிச்சத்தை நினைத்து மட்டும் தான் பார்க்க முடியும்... இருளில் உங்கள் நம்பிக்கை மட்டும் தான் வெளிச்சம்... இருளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மனித மூளை வெகுவாக பாதிக்கக்கூடும்... நேரம் போவதே தெரியாது... இரவெது பகலெது என புரியாது... ஏகப்பட்ட இனம்புரியா பயம், சிக்கல்களுக்குள் மனம் கிடந்து தவிக்கும்...

அதிக நாட்கள் குகைக்குள் இருந்த நபர் என்ற உலக சாதனை படைத்து இருளடைந்த குகையை விட்டு 500 நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த பியாட்ரிசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...

எப்படி இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தும்,வெளியே வரும் போது மகிழ்ச்சியுடன் காணப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?... "நீங்கள் ஒரு கனவைக் கண்டு அதை நிறைவேற்றினால் அழுது கொண்டா வெளி வருவீர்கள்?" என்று புன்னகையுடன் பதிலளித்த பியாட்ரிசின் அசாத்திய துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்