21 நிமிடத்தில் 50 செய்திகள்.. | இரவு தந்தி எக்ஸ்பிரஸ்

x

பெங்களூரில் நடைபெறவுள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அழைப்புவிடுத்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்ற வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்...

தி கேரளா ஸ்டோரி திடைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை கோரிய மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், படத்தை திரையிடும் திரையரங்குகள், பார்வையிட விரும்புவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 2வது வாரத்துக்கு தள்ளிவைத்தது.

தொல்லியல் துறை சார்பில் நெல்லையில் நவீன வசதிகளோடு அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியதற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 33 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியகமானது ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் கிடைத்த தொல்பொருட்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

சிந்து சமவெளி நாகரீகம் தான் முதல் நாகரீகம் என்ற கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டினார். பொருநை அருங்காட்சியக விழாவில் பங்கேற்ற பின் பேசிய அவர், சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிரிந்தது என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். கிறிஸ்து பிறப்பதற்கு 150 ஆண்டுகளுக்கு முந்தைய பொருள் சிவகளை அருகே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்