14 நிமிடத்தில் 30 செய்திகள்.. இரவு தந்தி செய்திகள் | Thanthi Night News (22.04.2023)

x

சென்னை தலைமைச் செயலகத்தில், மே 2ம் தேதி மாலை 5 மணியளவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகளை ஈர்க்க, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு, சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சென்னை கிறிஸ்துவ சபை தலைவர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் ,கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ‌ இருதயராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் முதல்வரை சந்தித்தனர்.

சட்டமன்றத்தில் இயற்றியுள்ள தொழிலாளர் சட்டத்தை தி.மு.க அரசு வாபஸ் பெற வேண்டுமென, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், உலகத் தொழிலாளர்கள் கடுமையாக போராடி, பல உயிர்களை பலி கொடுத்து பெற்ற உரிமையான 8 மணி நேர வேலை என்ற உரிமையை பறித்து நிறைவேற்றியுள்ள இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நல சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், தமிழக அ ரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்