சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட வைக்கும் திருத்தலம்... 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்

x

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதரைப் போல்... அத்தி ஸ்ரீனிவாச பெருமாளாய் திருமால் வீற்றிருக்கும் திருத்தலம் இது...

ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி அருள் பாலிக்கும் இக்கோயிலானது சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது...

உள்ளே நுழைந்ததும் தசாவதார மண்டபம்... அதில் விஷ்ணுவின் 10 அவதார சிற்பங்கள்... கூடுதலாக கொடிமர பலிபீடம்... அதைத் தாண்டினால் கருவறை மண்டபம்... கல்லால் ஆன ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் பெருமாள்...

150 ஆண்டுகளுக்கு முன்பு அத்தி மரத்தால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட இரண்டரை அடி உயர பெருமாள் விக்ரகம் கண்களைக் கவர்கிறது...

40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கின் போது புதிதாக ஆறடி உயர கற்சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது...

கருவறைக்கு வலப்பக்கம் அமர்ந்த கோலத்தில் பத்மாவதி தாயார்... இடப்பக்கம் சீதையுடன் வீற்றிருக்கிறார் ராமர்...

கருவறைக்கு நேர் எதிரே கருடாழ்வார்... கோயிலுக்கு அழகு சேர்க்கும் அஷ்ட லட்சுமி மண்டபம்...

தீயனவற்றை வதம் செய்து நல்லனவற்றையே அருள்பாலிக்கும் ஆழ்வாரான சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி...

ஜாதக தோஷ குறைபாடு, திருமணத்தடை, தொழில் தடை, தீவினைகள், செய்வினை குறைபாடு இருந்தால் இந்த சக்கரத்தாழ்வாரை வலம் வந்து குறைகளை நிவர்த்தி செய்யலாம்...

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருப்பதைப் போலவே இங்கும் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாளுக்கு தனி சன்னதி...

ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் கற்சிலைகளுக்கு அவர்களின் அவதாரத் திருநாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்...

சிவனுக்கு உகந்த வில்வமரத்தை தல விருட்சமாக கொண்ட வைணவ திருக்கோயில் இது...

வில்வ மரத்தை மகாலட்சுமியாக வணங்கி மகிழ்கின்றனர் பக்தர்கள்...

ராகு, கேது தோஷம் இருந்தால் தலவிருட்சத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையாரை வணங்குவது சிறப்பு...

புரட்டாசி சனி, மார்கழி உற்சவம், ஆடிப்பூரத்தின் போதெல்லாம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் களைகட்டும்...

பிரம்மோற்சவத்தின் போது பத்மாவதி தாயார் பல்லாயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை மாலையாய் அணிந்து அழகே உருவாய் வீற்றிருப்பாள்...

விசேஷ நாட்களில் இறைவனுக்கு தங்கக் கவசம் சாற்றப்படுவது கூடுதல் சிறப்பு...

தேர்வெழுதும் மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நன்மை கிட்டும்...

இத்தலத்தின் நடையானது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்...

போடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்..

சனி திசை நடைபெறுபவர்கள்... சனியால் பாதிக்கப்பட்டவர்கள்... ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு நன்மைகள் பெறலாம்... பெருமாளின் அருள் உங்களை நிச்சயம் வழிநடத்தும்..


Next Story

மேலும் செய்திகள்