(12.07.2023) ஊர்ப்பக்கம் | Oorpakkam | தமிழக செய்திகள் | Thanthi TV
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஆயிரத்து 772 பணிகளுக்கு, 6 ஆயிரத்து 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது,150 கோடியில் சாலை பாதுகாப்பு பணி, 787 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைப்பாலங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டங்களை செயல்படுத்த 6 ஆயிரத்து 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது...
திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதிக்கும் நோக்கில் வீடியோ வெளியிட்டதாக, நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் இளங்கோவன், கனல் கண்ணனின் கைது, திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டினார்.
கேரள மாநிலம் திருச்சூரில் அரசு மருத்துவர் வீட்டில், சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், சுமார் 15 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரியில், மருத்துவராக பணிபுரிந்து வரும் ஷெரி ஐசக், நோயாளி ஒருவரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நோயாளி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய நோட்டை நோயாளியிடம் கொடுத்தனர். அப்போது, அந்த நோயாளி மருத்துவரிடம் பணத்தை கொடுத்த போது, கையும் களவுமாக சிக்கினார். பின்னர், அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சுமார் 15 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்...
கடலூர் மாவட்டம், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சித்தேரி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் மாயவேல் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தன்னால் பணியையும் சரிவர செய்ய முடியவில்லை எனக் கூறும் அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.