மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை.. யாருக்கு கிடைக்கும்? கிடைக்காது? - முழு விவரம் உள்ளே..!

x

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது என்பதை இப்போது பார்க்கலாம்...

தமிழக அரசு அறிவிப்பு படி, 21 வயது நிரம்பிய பெண், அதாவது 2002 செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் மகளிர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் தங்கள் ரேஷன் கடையிலே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்.

குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள பெண், ஆண் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவார்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர்.

குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், குடும்ப உறுப்பினரே பயனரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்ய பொருளாதார தகுதியை வகுத்துள்ள அரசு, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்;

ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதற்காக வருமான சான்று, நில ஆவணங்களை இணைக்க தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். வருமான வரி கட்டுவோரை உறுப்பினராக கொண்ட குடும்பங்கள், தொழில் வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை செலுத்துவோர் குடும்பங்கள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.

உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரிவோர், ஓய்வூதியதாரர்களை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க முடியாது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் விண்ணபிக்க முடியாது. கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் வைத்திருப்போர் விண்ணப்பம் செய்ய முடியாது. முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்க முடியாது.

தகுதிபெற்ற குடும்பம், கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பமாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்