தினமும் 10 லட்சம் பேர் பயணம்...அரிவாள், கத்தியுடன் சுற்றும் இளைஞர்கள் - அச்சமூட்டும் சென்னை ரயில் நிலையங்கள்

x

ரயில் நிலையங்களில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ரயில் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குறைபாடுகளை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சென்னையையும் அலற விட்டது. ரயில் பயணம் என்றாலே விழி பிதுங்கி நிற்கும் அளவிற்கு பலரை அச்சம்பவம் உலுக்கியது. இதன் பின்னர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அண்மையில் போன் பறிப்பு சம்பவத்தில் இளம்பெண் மரணித்த கொடூரம், மற்றும் 2 நாட்களுக்கு முன்னர் சைதாப்பேட்டையில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தவிர, அவ்வப்போது ஓடும் ரயில்களில் இளைஞர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதும் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிடையே தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

ரயில்கள் வருவதில் காலதாமதம், சிக்னல்களில் கோளாறு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளில் பயணிகள் சிக்கி தவிக்க, ஒரு புறம் பாதுகாப்பு குறைபாடுகளும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னையில், முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நடைமேடை மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 102 புறநகர் ரயில் நிலையங்களில் 9 ரயில் நிலையங்களில் மட்டுமே தற்போது சிசிடிவி கேமராக்கள் முழுமையாக செயல்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, மற்றும் அரக்கோணம் மார்க்கத்திலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் வேளச்சேரி மார்க்கத்திலும் உள்ள ரயில் நிலையங்களில் சீரமைப்பு செய்திட தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 15 ரயில் நிலையங்களுக்கு11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தவிர 26 ரயில் நிலையங்களில் 528 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் கழிப்பறைகள், ரயில் நிலைய முகப்பு, நுழைவாயில், மின்தூக்கிகள், நகரும்படிக்கட்டுகள், தரமான நாற்காலிகள், அகலமான நடைமேம்பாலங்கள் ஆகியவற்றை அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பெண்கள் பெட்டிகளை நடுவே மாற்றிடவும் பெட்டிகளில் கட்டாயம் ரயில்வே காவலர்களை பணியமர்த்திடும் வகையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.




Next Story

மேலும் செய்திகள்