பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ் யார்க்கர்.. அனுதாப அலை.. ரகசிய எச்சரிக்கை.. கர்நாடகாவில் காங்கிரஸ் அடிக்கும் சிக்ஸர்கள்
பாஜக-காங்கிரஸ் இடையே 'நெக் டு நெக்' போட்டி நிலவும் கர்நாடகாவில் காங்கிரஸ் நிலை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சடுகுடு ஆட்டத்தில் கடைசி நேரத்தில் எதிராளியைவிட ஒரு பாயிண்ட் அதிகம் பெற்றிருக்கும் அணி... தொட்டுபார் என போக்கு காட்டி எப்படி வெற்றியை வசமாக்குமோ அப்படி தந்திர ஆட்டத்தில் ஆர்வம் காட்டுகிறது காங்கிரஸ்...
பிற மாநிலங்களை போல் அல்லாமல் காங்கிரஸ் சற்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலம் கர்நாடகா. இங்கு ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடம் தனி அப்ளாஸ் வாங்கியது. அங்கு சோனியா காந்தியும் களமிறங்கியது யாத்திரையில் ஹைலைட்...
இப்போது மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை பாஜகவிடம் தட்டிப் பறிக்க வேண்டும், இந்திய ஒற்றுமை யாத்திரையை வாக்காக அள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. மாநிலத்தில் வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சிக்கும், கூட்டணி பேச்சுக்கும், தொண்டர்களுக்கும் பூஸ்டாக அமையும்.
இந்த சூழலில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், காங்கிரஸ் அதிக இடங்களில் பிடிக்கும் என்ற இருவித கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கிறது. இதை களத்தை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், களத்தில் இதே சூழலை மே 10 ஆம் தேதி வரையில் நீட்டிக்க செய்வது காங்கிரஸ் கையில்தான் உள்ளது என்கிறார்கள். அதிலும் காங்கிரஸ் கவனமாக காய்நகர்த்துகிறது.
முக்கியமாக பிரசாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசக்கூடாது, இந்துத்துவா? மதசார்பின்மையா? என்ற வாதத்தை ஏற்படுத்தக்கூடாது என வேட்பாளர்கள், நிர்வாகிகளை காங்கிரஸ் தலைமை எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டது, பொய்யர்களின் தலைவர் எனக் கூறியது எல்லாம் காங்கிரசுக்கு backfire ஆனதாகவே கட்சி அறிந்திருப்பதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகளை மக்கள் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த கட்சி தலைமை கேட்டுக்கொண்டிருக்கிறது. பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள், இளைஞர் களுக்கு வேலையின்மை, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு விலை என்ற மக்கள் பிரச்சினை காங்கிரஸ் பேசுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்கிய திட்டத்தில்
10 கிலோ அரிசி இலவசம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் மெனக்கெடுகிறது.
மறுபுறம் எதிராளியின் தவறை தனக்கு சாதகமாக்கும் வியூகத்தில் காங்கிரஸ் கவனமாக காய் நகர்த்துகிறது. இதற்கு கிடைக்கும் வாய்ப்பையும் விடுவதில்லை காங்கிரஸ். அமுல் பால் பெங்களூருவில் விற்பனை விவகாரத்தை குஜராத்தின் அமுலா? கர்நாடகாவின் நந்தினியா...? என விவாதப் பொருளாக்கியது. இதில் காங்கிரசுக்கு களத்தில் பக்கபலமாக இரட்டை குழல் துப்பாக்கியாக இருக்கிறார்கள் சித்தரமையா, டி.கே. சிவகுமார்...
ராகுலின் பிரசாரம் எப்படி இருக்க போகிறது என்பதும் முக்கியம் பெறுகிறது. இதுபோக அதானி விவகாரம், ராகுல் காந்தி பதவி பறிப்பு அனுதாப அலை போன்றவை காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என்று அந்த கட்சி நம்புகிறது.
காங்கிரசுக்கு நேர்மறையான களமாக பார்க்கப்படும் சூழலில், அக்கட்சி கடைசி நேரத்தில் வாயை கொடுத்து, கிடைக்கும் சாக்கில் சிக்சர் அடிக்கும் பிரதமர் மோடியிடம் வாய்ப்பை கொடுத்துவிடக்கூடாது என்பதுதான் அரசியல் பார்வை யாளர்கள் கூற்றாக இருக்கிறது.