இந்திரா காந்தி ரூட்டை பிடித்த பிரியங்கா.. பாஜக கோட்டையிலே கர்ஜனை.. 'குட்டி' பிளாஸ்பேக்.. எகிறும் மைலேஜ்

x

கர்நாடகாவில் இந்திரா காந்தியை காங்கிரஸ் நினைவுகூற காரணம் என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

எனது பாட்டி இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரை மீண்டும் சிக்மகளூரு மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தார்கள். இப்போது எனது அண்ணன் ராகுல் காந்தி பொய்யான வழக்கில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இன்று நாட்டு மக்களையே நம்பியிருக்கிறோம்...

இது சிக்மகளூருவில் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி உருக்கமாக உதிர்த்த வார்த்தைகள்...

தனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடத்தில் தனது தமையனுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற தொனியில் இருந்தது பிரியங்காவின் பிரசாரம்..

இந்திரா காந்தி சிக்கி தடுமாறிய போது அவருடன் சிக்மகளூரு மக்கள் துணை நின்றார்கள் என பிரியங்கா குறிப்பிட்டிருப்பது, 1978 ஆம் ஆண்டு நடந்த வரலாற்று நிகழ்வு...

நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பிறகு 1977-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியிருந்தது. இந்திரா காந்தி தனது ரேபரேலி தொகுதியில் தோல்வியை தழுவியிருந்தார். காங்கிரஸ் நெருக்கடியான சூழலில் சென்ற போது 1978-ல் தஞ்சாவூர், சிக்மகளூரு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் சிக்மகளூரு தொகுதியில் போட்டியிட்டார் இந்திரா காந்தி.. 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் இந்திரா...

இந்த வெற்றி இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் மறுவாழ்வாக அமைந்தது. சிக்மகளூருவில் உத்வேகம் பெற்ற காங்கிரஸ், 1980 தேர்தலில் அமோக இடங்களில் வென்றது இந்திரா மீண்டும் பிரதமர் அரியணையை ஏறினார்.

இந்த நிகழ்வையே சுட்டிக்காட்டி வாக்காளர்களை நெருங்க முனைப்பு காட்டியிருக்கிறார் பிரியங்கா.. எப்படி இந்திரா காந்தி அங்குள்ள சாரதாம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து பிரசாரம் செய்தாரோ அதே பாணியை பின்பற்றினார் பிரியங்கா காந்தி...

இப்போது கர்நாடகாவில் வெற்றி என்பது காங்கிரசுக்கு வாழ்வா-சாவா போராட்டமாகவே இருக்கிறது. கர்நாடகாவில் வெற்றி காங்கிரசுக்கு புத்துயிராக அமையும் என்பதில் ஐயமில்லை... இதற்காக தீவிர பிரசாரம் செய்யும் பிரியங்கா... இந்திரா காந்தியை நினைவுகூர்ந்து சிக்மங்களூரு உடனான பிணைப்பை பாராட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் வசமிருந்த சிக்மகளூருவில் 2000-த்திற்கு பிறகு இந்துத்துவாக கோஷம் எதிரொலிக்க பாஜக வசமாகிவிட்டது. சிக்மகளூரு சட்டப்பேரவை தொகுதியில் 2004 சட்டப்பேரவை தேர்தலில் இருந்து பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவியும், உடுப்பி-சிக்மகளூரு நாடாளுமன்ற தொகுதியில் 2014-ல் இருந்து பாஜகவின் மத்திய அமைச்சர் சோபாவும் வெற்றிப்பெற்று வருகிறார்கள். பாஜக வலுவாக இருக்கும் பகுதியில் பிரியங்காவின் பிரசாரம் பலிக்குமா...? என்பதை சிக்மகளூரு மக்கள் கையிலே உள்ளது


Next Story

மேலும் செய்திகள்