கனமழை காரணமாக 2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

x

கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவாரூரில் 12 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் காரைக்காலில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.


நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிந்து, வெயில் அடிக்க தொடங்கியதால், கடந்த மாதத்தில் இருந்து அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது

. இந்நிலையில், வேதாரண்யம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி, உப்பு பாத்திகள் கடல் போல் காட்சியளிக்கின்றன.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையால், நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

திருவிடைமருதூர் தாலுகாவுக்கு உள்பட்ட காவனூர், கண்ணாரக்குடி, திருப்பனந்தாள், மணிக்குடி, நரிக்குடி, முட்டக்குடி, பருத்திக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.

மழை தொடர்ந்து பெய்தால், நெற் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கனமழை கொட்டித் தீர்த்த‌து.

திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கனமழை பெய்த‌தால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கும்பகோணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், முக்கிய சாலைகள் குளம்போல் காட்சி அளித்தன.

உழவர் சந்தை வாயில் முன்பும் மழைநீர் தேங்கியதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மேலும், நகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரம் விழுந்து, மாணவர்களின் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்