தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி.. கொடியில் மூவேந்தர்கள் சின்னம் - திகைக்க வைக்கும் பழைய வரலாறு..!

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி.. கொடியில் மூவேந்தர்கள் சின்னம் - திகைக்க வைக்கும் பழைய வரலாறு..!
x

ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்பதை முன்வைத்து கிளம்பிய அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டுக்கு என தனியாக கொடி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் திமுக எம்எல்ஏ கருணாநிதி.

இதுபோன்ற கோரிக்கை எழுவது புதிதானது அல்ல.. இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகம் போன்று தமிழ்நாட்டிற்கும் தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து அமைதியாவது தொடர்கதையாக இருக்கிறது.

மூவேந்தர் ஆட்சியில் சேர நாட்டு கொடியாக வில்-அம்பும், சோழ நாட்டு கொடியாக பாயும் புலியும், பாண்டிய நாட்டின் கொடியாக இரட்டை மீன்களும் என தமிழ்கொடிகள் பறந்தன.

பின்னர், களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், வெள்ளையர்கள், அந்நிய நாட்டவர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டு கொடிகள் வரலாற்றை இழந்தன. மீண்டும் 20 ஆம் நூற்றாண்டில் மூன்று கொடிகளும் ஒன்றாக தமிழ்க்கொடியான வரலாறும் உண்டு.

1938-ல் ராஜாஜி இந்தி மொழியை கட்டாயமாக்கிய போது, வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் வில், புலி, மீன் கொடிகளை சேர்த்து தமிழ்க்கொடியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

1942-ல் தமிழ் ராச்சியக் கட்சியை தொடங்கிய சி.பா. ஆதித்தனார், தமிழ்நாட்டு இலச்சினையாக மூவேந்தர்களின் கொடியை பயன்படுத்தியிருக்கிறார். 1957-ல் தனது கட்சியை நாம் தமிழர் கட்சியாக்கி நடத்திய மாநாட்டில் மூவேந்தர்கள் கொடி பயன்படுத்தப்பட்டதாக மூத்த அரசியல் ஆர்வலர்கள் பலராலும் கூறப்படுகிறது.

சென்னை மாகாணத்துக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சி, 1954-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கால சென்னை மாநகராட்சி கொடியை மாற்றியமைத்தவர். வில், புலி, மீன் சின்னங்கள் கொண்ட கொடியாக சென்னை மாநகராட்சி கொடியை பறக்கவிட்டார். இன்றும் அதுவே தொடர்கிறது.

1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், கோவை மாணவர்கள் போராட்டத்தில் தமிழ்நாடு வரைபடம் அடங்கிய கொடியை தமிழ்நாட்டுக்கொடியாக ஏற்றியுள்ளனர்.

மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1970-ல் தான் வடிவமைத்து வைத்திருந்த தமிழ்நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

கொடியின் வலது மேற்புறத்தில் இந்திய தேசியக்கொடி, இடது கீழ்ப்பகுதியில் தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தது.

2010-ல் விடுதலைச் சிறுத்தைகள் தமிழர் இறையாண்மை மாநாட்டில், சிவப்பும், மஞ்சளும், நீலமும், நட்சத்திரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடி தமிழ்நாடு கொடியாக திருமாவளவனால் அறிமுகம் செய்யப்பட்டது.

2016-ல் சீமான் கட்சியால் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் அடங்கிய கொடி தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெல்க தமிழ் என்ற வாசகம் இடம்பெற்ற இந்த கொடி, ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. தமிழ் அமைப்புகளால் மூவேந்தர் கொடியை தமிழ்நாட்டு கொடியாக ஏற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்