பொதுக்குழுவில் யாருக்கு பலம் அதிகம்..? ஓபிஎஸ்-க்கு சுற்றறிக்கை..ஈபிஎஸ் அதிரடி வியூகம்

x

பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது.

இடைத்தேர்தல் வேட்பாளருக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெற்று, அந்த தீர்மானத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்ய இறுதி நாளுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால், திங்கட்கிழமையன்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வேட்பாளர் யார் என்று தெரிவிக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பொதுக்குழுவை கூட்டாமல் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற ஈபிஎஸ் தரப்பு ஆர்வம் காட்டுகிறது.

அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவத்தை வழங்குவார், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு விபரம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் அவருடன் நீக்கப்பட்டவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை அவைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூட்ட வேண்டி நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனக் கூறியிருக்கும் தளவாய் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரம் மட்டும் இருந்தால் போதும் எனவும், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மை உள்ளதால் தென்னரசு அதிமுக வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனையையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது விவகாரத்தை தீர்மானிக்க உள்ள பொதுக்குழுவில் மெஜாரிட்டி என்று பார்த்தால் ஈபிஎஸ்-க்கே அதிகமாக உள்ளது தெரிகிறது.

ஏற்கனவே பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவாலே ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆதரவு எண்ணிக்கையில் பார்க்கையில்,

ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஈபிஎஸ் தரப்புக்கு இரண்டாயிரத்து 539 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்.

அதுவே ஓபிஎஸ்-க்கு 34 உறுப்பினர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். மாவட்ட செயலாளர்களில் 69 பேர் ஈபிஎஸ்-க்கும், 6 பேர் ஓபிஎஸ்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஒன்றிய செயலாளர்களை பொறுத்தவரையில் 755 பேரது ஆதரவு ஈபிஎஸ்க்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே ஓபிஎஸ் தரப்புக்கு 30 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக ஈபிஎஸ்-க்கு 61 பேரது ஆதரவு உள்ளதாகவும், ஓபிஎஸ்-க்கு 4 பேர் ஆதரவு மட்டுமே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களை பொறுத்தவரையில் 3 எம்.பி.க்கள் ஈபிஎஸ்க்கு ஆதரவாகவும், 2 எம்.பி.க்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனர் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவுபடி அதிமுக வேட்பாளர் படிவத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட வேண்டும் என்ற இன்பதுரை, அதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்