10கிமீ-க்கு பரவிய நச்சு புகை... மக்களால் நிரம்பும் மருத்துவமனை... கலெக்டர் போட்ட Fb பதிவால் கொந்தளித்த நீதிமன்றம்... நடந்தது என்ன..?

x
  • எங்கு திரும்பினாலும் புகை மூட்டம்... நீரை தெளிக்கும் கடற்படை ஹெலிகாப்டர்கள்... குப்பைகளை கிளறும் ஹிட்டாச்சி இயந்திரங்கள்... அதில் மேலெழும் தீயை அணைக்க நீரை பீய்ச்சு அடிக்கும் தீயணைப்பு வீரர்கள் என காட்சியளிக்கிறது கொச்சியின் பிரம்மபுரம் குப்பை கிடங்கு பகுதி...
  • ஒருவாரத்திற்கு மேலாக குப்பை கிடங்கில் எரியும் தீயால் வெளியேறும் நச்சு புகையால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளை புகை சூழ்ந்ததால் மக்கள் மூச்சுவிட முடியாது பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
  • 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவிய புகையால் 600-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். நச்சு புகையை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பட்சத்தில் கட்டாயம் N95 மாஸ்க் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் குமட்டல் மற்றும் தலை சுற்றலை ஏற்படுத்துகிறது. முகக்கவசம் அணிந்து தீயை அணைக்க போராடும் தீயணைப்பு படையினருடன், விமானப்படையும், கடற்படையும் கைகோர்த்துள்ளது. தீயை அணைக்கும் பணிகளை கவனித்துவந்த எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ரேணு ராஜ் திடீரென வயநாடு கலெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
  • புகையால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வழக்கை தாமாக முன்வந்து கேரள உயர்நீதிமன்றம் விசாரித்த போது, பொறுப்பிலிருந்து மறைந்து கொள்ள வேண்டாம் என ரேணு ராஜுவை கடிந்துகொண்டது. எர்ணாகுளம் ஆட்சியராக நீதிமன்றத்தில் இருந்த அவரிடம், 2 நாட்களில் தீ அணைக்கப்படும் என தெரிவித்தீர்கள்... பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக என நீதிபதிகள் கேள்வியை எழுப்பினர்.
  • இந்த நிலையில் வயநாடுக்கு இடம் மாறி செல்வதற்கு முன்பாக மகளிர் தினத்தில் பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட கருத்து விவாதமாகியிருக்கிறது. நீ ஒரு பெண் என்று யாராவது கூறினால் நிச்சயம் அது பெருமை... ஆனால் நீ வெறும் பெண் என யாராவது கூறினால், அப்போதுதான் போராட்டம் தொடங்கும் என பதிவிட்டுள்ளார் ரேணு ராஜு.
  • தீயை கட்டுப்படுத்தும் விஷயத்தில் பெண் என்பதால் அவர் டார்கெட் செய்யப்பட்டதாகவும், அவரது திறமை மட்டம் தட்டும் விதமாக இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்ட நிலையில், அவரது பதிவு விவாதமாகியிருக்கிறது.
  • பெரும்பாலும் குப்பை கிடங்குகளில் குப்பைகள் மக்கும்போது உருவாகும் மீத்தேன் வாயுக்களால், வெப்ப காலங்களில் தீ விபத்து ஏற்படுகிறது.
  • கொச்சி குப்பை கிடங்களில் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையும் தொடர்கிறது. மறுபுறம் 80 % தீ அணைக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொச்சியில் சுகாதாரப் பணியாளர்கள் வீடுதோறும் ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்