#redwoodsmuggling #kattaiguna செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் படுகொலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர், அதிகாலையில் வீட்டு வாசலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது மேலானூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவியந்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தவர் குணசேகரன் என்ற கட்டை குணா. இவர் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட படவேடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர், கையில் வெட்டுக் காயங்களுடன் ஆரணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட கட்டை குணா மீது செம்மரக்கட்டை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் பெரணமல்லூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளைப் போலீசார் பறிமுதல் செய்த சம்பவத்துக்கும், இந்தக் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது தொழில் போட்டி காரணமா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.