#influencernishant #maduraitanishqrobbery #youtubermeenakshi மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் நிஷாந்தை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிஷாந்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற விசாரணையின் போது கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, தப்பிச் செல்ல யாரேனும் உதவினார்களா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர், ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் இல்லை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜபிரபு, 5 நாட்கள் என்பது அதிகம் எனக் கூறி, ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணையின்போது நிஷாந்தை துன்புறுத்தக் கூடாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை முடிந்து மறுநாள் மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.