அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு... அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு
"தினமும் சராசரியாக 106 பேர் கொலை"அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. சமீபத்தில் கரோலினாவில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டில் தினமும் சராசரியாக 106 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார்கள் என்றும் தொற்று நோயாக பரவும் இந்த வன்முறைகள் சர்வதேச அளவில் அமெரிக்காவை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நாட்டில் கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க புதிய விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், இதற்காக மாகாணங்கள் சொந்த சட்டங்களை உருவாக்கும் வண்ணம் சிவப்பு கொடி சட்டத்தை உருவாக்க நீதித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். இச்சட்டம் ஆபத்தாக கருதப்படுபவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை அகற்ற அங்கீகாரம் வழங்கும் என தெரிவித்துள்ளார்.