போலீஸ் காவலில் இருந்த இளைஞர் மரணம் - தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீயோன் நகரில் இருவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகியோரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். ஆகாஷ் டெலிசன் கைது செய்யும் போது கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஆகாஷ் டெலிசன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தனது மகனை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியதாகவும், சாதிய ரீதியாக பேசி அடித்ததாகவும் ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.