தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்வாரியத் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், அரசுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023 டிசம்பர் 1 தேதியிட்டு ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், அதே தேதியில் 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 சதவீத பணிப்பலன் ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு அவர்களின் நிலையைப் பொறுத்து 3,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை சிறப்புப்படி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, 2025 டிசம்பர் தேதியிட்டு பணப்பலன்களாக வழங்கப்படும் எனவும், இடைப்பட்ட இரண்டு ஆண்டுகால நிலுவைத் தொகைக்கு, மாதத்திற்கு 500 ரூபாய் வீதம் கருணைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் மின்வாரியத்தின் அனைத்து ஊழியர்களும் பயன்பெறுவார்கள் என அரசு கூறியுள்ளது.