தேர்தல் என்றால், பிரசாரமும், வாக்களிப்பும் பிரதானம். இதில், வாக்களிக்கும் மக்களிடம், தங்களின் வேட்பாளர்களையும், சின்னங்களையும் கொண்டு சேர்ப்பதில் அரசியல் கட்சிகள், படாதபாடு படுகின்றனர். ஆனால், கலையை ரசிக்கும் தமிழர்களை ஈர்க்க, தெரு கூத்து, ஆடல் பாடல் கச்சேரி போன்றவற்றை நம்புவதை தவிர வேறு வழியில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் புதிய உத்திகளை அரசியல் கட்சிகள் கையாளும். மக்களின் அபிமான தலைவர்கள், நடிகர்கள் வேடத்தில், கலைஞர்களை களமிறக்குவது பிரசாரத்தின் ஓர் அங்கம். மக்களின் மனதுக்கு நெருக்கமாக சென்று தங்கள் சின்னத்தை பதிய வைப்பதே அதன் நோக்கம். எம்.ஜி.ஆரின் வேடத்தில் வருவோர், மூதாட்டிகளை அரவணைப்பதும், குழந்தைகளை கொஞ்சுவதும் என அவராகவே வாழ்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், சரத்குமார் என வேடங்களில் வசதியாக வரும் கலைஞர்களின் வாழ்வு, அரிதாரம் கலைத்தவுடன் வறுமை படுகுழியில் பசியோடு படுத்துறங்கி விடுகின்றன. தேர்தலுக்கு பயன்படும் தங்களை, ஆபாச நடனம் ஆடுவதாக கூறி, தடை செய்வது நியாயமற்றது என்பது அவர்களின் குமுறல். தங்கள் மீதான தடையை நீக்கி கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் மேடை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.