வேலூர் அருகே பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக அரசுப் பள்ளி செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மத்தேட்டிபல்லி கிராமத்தில் இயங்கி வந்த அரசு துவக்கப்பள்ளி சேதமடைந்ததால் மாணவர்கள் படிக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் பள்ளி இயங்கி வந்தது. இங்கு மொத்தம் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். கோயிலில் சிறப்பு விழாக்களின் போது மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 6 மாதங்களாக கோயில் வளாகத்தில் பள்ளி செயல்பட்டு வந்தாலும் சேதமடைந்த பள்ளி வளாகத்தை கட்டித் தர நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.